தீபாவளி என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள்தான்... வானைப் பிளக்கும் வெடிச்சத்தமும், வண்ண வண்ண ஒளிகளை உமிழ்வதும் என்று ஏராளமான பட்டாசுகள் விற்பனைக்கு வருகின்றன.
பட்டாசுகளை வெடித்து அதில் வரும் சப்தமும், ஒளியும் நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கினாலும், எதிர்பாராத விதமாக அதனால் ஒருசில விபத்துக்களும் நிகழ வாய்ப்புண்டு.
எனவே பட்டாசுகளை கொளுத்தும் போது மிக மிக எச்சரிக்கையாக இருக்கவும். இவை எல்லாமே உங்களுக்குத் தெரியும்தான். எனினும் ஒரு சில குறிப்புகள்...
குழந்தைகள்.....
மிக பாதுகாப்பான இடத்தில் பட்டாசுகளைக் கொளுத்தவும்.
webdunia photo
WD
கொளுத்துவதற்காக வைத்திருக்கும் பட்டாசுகளில் இருந்து 25 அடி தூரத்தில்தான் நீங்கள் பட்டாசுகளை கொளுத்த வேண்டும்.
எரியாத, வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க வைக்க முயல வேண்டாம். அதனை பத்திரமாக அப்புறப்படுத்திவிட்டு அல்லது தற்காலிகமாக வேறு ஒரு இடத்தில் பட்டாசுகளை வெடிக்கவும்.
பட்டாசுகளை வெடிக்கும் இடத்தில் ஒரு வாலி நிறைய தண்ணீரை வைத்துக் கொள்வது நல்லது.
ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வெடிகளைக் கொளுத்த முயற்சிக்க வேண்டாம்.
பட்டாசில் தீயை வைத்ததும் உடனடியாக அங்கிருந்து நகர்ந்து விடவும். நீங்கள் வீரர், வீராங்கனைகள்தான் அதனை அங்கே நிரூபிக்க வேண்டாம்.
சில சமயங்களில் புஸ்வானம், சங்கு சக்கரங்கள் கூட வெடிக்கின்றன. எனவே எதுவாக இருந்தாலும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தால் இனிய தீபாவளியாக அமையும்.
ஒரு வேளை உங்கள் ஆடையில் நெருப்புப் பற்றிக் கொண்டால் அலறாமல், பயப்படாமல் உடனடியாக கீழே படுத்து உருளுங்கள். உங்கள் முகங்களை கைகளால் மூடிக் கொண்டு நெருப்பு அணையும் வரை உருளுங்கள்.
கொளுத்திய சுஸ்ரவத்தி கம்பி, சங்கு சக்கர வில்லைகளை நீர் நிரப்பிய பாத்திரத்தில் போடவும். எரிந்து முடிந்ததும் கீழே போட்டுவிட்டு அதை மிதித்து தீப்புண்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.
பெரியவர்களுக்கு...
webdunia photo
WD
குறைந்த விலையில் கிடைக்கும் மட்டமான பட்டாசுகளை வாங்க வேண்டாம். இதில் மிச்சம் பிடித்த பணத்தை இரு மடங்காக மருத்துவருக்கு அளிக்க நேரிடும், எனவே நல்ல தரமான பட்டாசுகளை வாங்கவும்.
பட்டாசுகளை மூடிய பெட்டியில் பத்திரப்படுத்தி வைக்கவும்.
ஒவ்வொரு பட்டாசுகளிலும் கொடுத்துள்ள வழி முறைகளை படித்து அதன் படி அதனை வெடிக்கச் செய்யவும்.
பட்டாசுகளை வெடிக்க நீண்ட ஊதுபத்திகளை வாங்கவும்.
வெடிக்க வேண்டிய பட்டாசுகளை உங்கள் சட்டை அல்லது பேன்ட் பாக்கெட்டுகளை வைத்துக் கொள்ளாதீர்கள்.
குழந்தைகள் எதிரில் பட்டாசுகளை கையில் கொளுத்தி தூக்கி எறியாதீர்கள். அது தவறான உதாரணமாக அமையும்.
பட்டாசுகளைக் கொளுத்தும் குழந்தைகளை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருங்கள்.
பட்டாசுகளை வெடித்த பின் நீங்களும் கைகளை கழுவுங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் அறிவுறுத்துங்கள்.
5 வயதுக்கு குறைவான குழந்தைகளிடம் பட்டாசுகளை வெடிக்கக் கொடுக்க வேண்டாம்.
பட்டாசுகள் வெடிக்கும்போது நீங்கள் செல்லமாக வளர்க்கும் நாய், பூனைகளை வீட்டிற்குள் வைத்து பூட்டவும்.
தெருக்களில் பட்டாசுகளை வெடிப்பது தவறுதான். எனினும் நகர வாழ்க்கையில் வேறு வழியில்லை. எனவே மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் பட்டாசுகளை வெடிக்கவும். அஜாக்கிரதை வேண்டாவே வேண்டாம்.
வியாபாரிகளுக்கு...
மிகுந்த பாதுகாப்பான இடங்களில் பட்டாசு கடைகளை அமைக்க வேண்டும்.
தரமான பட்டாசுகளை மட்டுமே விற்பனைக்கு வைக்க வேண்டும் என்று கொள்கை வேண்டும்.
சிறார்களுக்கு பட்டாசுகளை விற்க வேண்டாம்.
பட்டாசுகளை வாங்குவோருக்கு, அதற்கேற்ப ஊதுபத்திகளை வாங்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
புதிய பட்டாசுகளை வெடிப்பதற்கான முறைகளை வாங்குவோருக்கு கூற வேண்டும்.
கடைகளில் அதிக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பணியாளர்களை அமர்த்த வேண்டும்.
ஏதேனும் ஆபத்து என்றால் எல்லோரும் விரைவாக வெளியேறும் வகையில் கடையை அமைக்க வேண்டும்.
தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் உடன் வைத்திருத்தல் அவசியம்.
இவையெல்லாம் சரியாக கடைபிடித்தால் இந்த தீபாவளி உங்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான தீபாவளியாக அமையும்.