தீபாவளி ஆண்டுக்கு ஒரு முறை என்றால் தலை தீபாவளியோ ஆயுளுக்கு ஒரு முறைதான்... ஆம் திருமணமாகி முதல் ஆண்டில் வரும் தீபாவளியே தலை தீபாவளியாக தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது!
திருமணத்திற்குப் பின்னர் வரும் அனைத்து பண்டிகைகளும் மணமகனின் வீட்டில் கொண்டாடப்பட்டாலும் இந்த தலை தீபாவளி மட்டும் மணமகள் வீட்டில் கொண்டாடப்படுவது மற்றுமொரு சிறப்பு.
புதிதாக மணமுடித்த மணமக்களை தீபாவளிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே பெண்ணின் பெற்றோர் அவர்களது வீட்டிற்குச் சென்று சீர் வரிசை (வெற்றிலை, பூ, பழங்கள், இனிப்புகள், ஆடைகள் ) வைத்து தலை தீபாவளி கொண்டாட வீட்டிற்கு வருமாறு அழைப்பர்.
அதன்படி மணமக்களும் தீபாவளிக்கு முன் தினமே பெண்ணின் வீட்டிற்குச் செல்வர்.
தீபாவளி அன்று அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து அந்த பெண்ணும், அவளது கணவரும் எண்ணெய் வைத்து குளித்து முடித்து புத்தாடை அணிவர்.
பூஜைகள் செய்து, பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் இனிப்புகள் உண்டு மகிழ்வர். அவர்கள் ஜோடியாக பெண்ணின் குடும்பத்தாருடன் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்வர். மணமகன் தன் மனைவியின் குடும்பத்தாருடன் தீபாவளியை கொண்டாடுவதுதான் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தலை தீபாவளி.
பெண் எடுத்த வீட்டில் மணமகனும் ஒரு அங்கத்தினர் தான் என்பதை கூறும் வகையிலும், பெண்ணை தங்கள் வீட்டிற்கு அனுப்பிய சம்பந்தி வீட்டிற்கு தீபாவளி அன்று தனது மகனை உங்களது மகனாக ஏற்றுக் கொள்ளும்படியாக அனுப்பி வைத்து பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் உறவு பாராட்டிக் கொள்வதும் இந்த தலை தீபாவளியின் வழக்கமாகும்.
தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை ஆகியவற்றில் தலை பொங்கலும் கொண்டாடப்படுவது வழக்கம்.
என்ன உங்க தலை தீபாவளி ஞாபகம் வந்துவிட்டதா?