தீபாவளி - பளபளக்க வைக்கும் புத்தாடைகள்

webdunia photo WD  
தீபாவளி என்றவுடன் நம்மில் உடனே தோன்றுவது புத்தாடைகள் தான். அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளியாக இருந்தாலும் கூட புத்தாடை இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவதில்லை. அவரவர்கள் வசதிக்கேற்ப புத்தாடைகளை வாங்கி தீபாவளியை பளபளக்க வைப்பதில் தவறுவதில்லை.

உலகத்திலேயே உணவுக்கு அடுத்தப்படியாக மிகப் பெரிய தொழில் ஜவுளித் தொழில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் ஆடை உற்பத்தியில் பல டிசைன்கள் வந்து வந்து மறைந்து விடுவது வழக்கமான ஒன்று. ஆயத்த ஆடைகள் என்று அழைக்க கூடிய ரெடிமேட் ஆடைகள் தான் நம்மில் பலரின் வரவேற்பை அதிகப்படுத்தி வருகிறது. சீசனுக்கு தகுந்தபடி ஒவ்வொரு விழாக்காலத்திலும் புதிய புதிய டிசைன்கள். தீபாவளிக்கென்றே சலுகைகளை வாரி வாரி வழங்குகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை 300க்கும் மேற்பட்ட மிகப் பெரிய ஜவுளிக் கடைகள் உள்ளன. இவற்றைத் தவிர 3500க்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் சிறிய அளவிலான ஜவுளிக்கடைகள் உள்ளன. இதன் மூலம் சுமார் 65 ஆயிரம் பேர் நேரடியாக வேலை வாய்ப்பும், 50 ஆயிரம் பேர் மறைமுக வேலைவாய்ப்பும் பெறுகின்றனர்.

தமிழகத்தில் ஒரு ஆண்டில் நடக்கும் மொத்த ஜவுளி விற்பனையில் 50 சதவீதம் தீபாவளி சீசனில் மட்டும் விற்பனையாகிறது. சினிமாவின் பெயர்கள் பிரபலமான நடிகர் நடிகைகளின் பெயர்களை ஆடைகளுக்கு வைத்து விற்பனை செய்யப் படுவதால் கூட ஒரு வகையில் விற்பனை கூடுகிறது என்று சொல்லலாம். தமிழகத்தில் ஒரு ஆண்டின் துணி விற்பனை மட்டும் 2 ஆயிரம் கோடியைத் தாண்டுகிறதாம்.

webdunia photo WD  
சென்னையைப் பொறுத்தவரை வழக்கம் போல் சென்னை சில்க்‌ஸ், போத்தீ‌ஸ், ஆர்எம்கேவி, குமரன், சரவணா உள்ளிட்ட பல பெரிய ஜவுளி கடைகளும் புதிய டிசைன்களை தீபாவளிக்காக குவித்துள்ளனர். தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பிருந்தே கூட்டம் அலை மோத தொடங்கி விட்டது. திருவிழாக் கோலம் போல் காட்சியளிக்கும் தி.நகர், புரசைவாக்கம் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. பல சினிமாக்களின் பெயர்களில் ஆடைகள் குவித்துள்ளனர்.

குறிப்பாக சென்னை சில்க்ஸ், போத்தீ‌ஸ், ஆர்எம்கேவியில் விதவிதமான டிசைன்களுக்கென்றே தனிக் கூட்டம் தான்.