கேதார கௌரி விரதம், முருகன் சுக்ரவார விரதம், தனத்திரயோதசி, யமதுவிதியை, கோவத்ச துவாதசி, பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி போன்ற நிகழ்வுகளும் ஐப்பசியில் நிகழ்கின்றன. இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
இப்பண்டிகை இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்களால் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை வடஇந்தியாவில் லட்சுமி பூஜை என்றும், வங்காளத்தில் காளி பூஜை என்றும் வழங்கப்படுகிறது.
இப்பண்டிகையின்போது நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் மக்கள் நீராடுகின்றனர். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். பின் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புக்கள், பட்சணங்கள் வைத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர்.
புதிய ஆடைகளை அணிந்து கோவில்களில் வழிபாடு நடத்துகின்றனர். உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள், பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்கின்றனர்.
புதுமணத் தம்பதியர் தலைதீபாவளியை மணப்பெண்ணின் வீட்டில் கொண்டாடுகின்றனர். அன்பு, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றின் வெளிபாடாக தீபாவளி கொண்டாட்டம் அமைகிறது.