புத்தாண்டு பிறந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் நாம் கடந்து வந்த பாதையில் திரும்பிப் பார்க்கும்போது இந்தியா தற்போது மெல்ல மெல்ல முன்னேற்றத்தை நோக்கி நடை போட்டு வருவதை உணர முடிகிறது.
தொழில் புரட்சியை பயன்படுத்திக் கொள்ளாமல் இந்தியா வளர்ச்சியில் பின் தங்கிவிட்டதாக பலரால் கூறப்பட்டாலும் அறிவுப் புரட்சியில் மற்ற எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்ததன் மூலம் மத்திய தர வர்கத்தினர் 30 கோடி பேர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளனர். இந்தியா மென்மேலும் வலிமைமிக்க நாடாக உருவாகி வருவது இந்தப் புத்தாண்டில் நம் எல்லோருக்கும் ஒரு இனிய செய்தியாகும்.
1991ல் சந்தைப் பொருளாதாரத்திற்குள் நுழைந்ததில் இருந்து படிப்படியாக வளர்ந்த நாம், அறிவுப் புரட்சியின் மூலம், தொழில் புரட்சியில் வளர்ந்த நாடுகளை நம்மை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளோம்.இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ஆன்மீகத்தைப் பற்றியும், வறுமை சூழ்நிலை பற்றியும்தான் பேசிக் கொண்டிருக்கிறோம், ஆனால் இதேக் காலக் கட்டத்தில் சமூகப் பொருளாதார மாற்றங்கள் எந்த அளவிற்கு நடைபெற்றுள்ளது என்பதை நம்மில் பலர் புரிந்து கொள்ளாமலேயே இருந்து வருகிறோம்.
இந்த மாற்றம் சமூக ஜனநாயக மலர்ச்சி மற்றும் கீழ் ஜாதி மக்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றதில் இருந்து தொடங்குகிறது. கடந்த 25 ஆண்டுகளில் நம் நாடு போதுமான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது. 1980 முதல் 2002 வரையில் 6 விழுக்காடாக இருந்த வளர்ச்சி விகிதம் 2003-2006க்கு இடைப்பட்ட நிதியாண்டுகளில் 8 விழுக்காடாக அதிகரித்தது.இந்த உச்சகட்ட வளர்ச்சி கடந்த 25 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு விழுக்காடு சமூகத்தின் அடித்தட்டில் இருந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது.
இதன் மூலம் சுமார் 20 கோடி மக்கள் கடந்த 25 ஆண்டுகளில் நடுத்தர வர்க்கமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். இதுவே இன்றைய நடுத்தர மக்களின் எண்ணிக்கை 30 கோடியாக உயர்ந்ததற்குக் காரணம். இதே நிலை தொடருமானால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் உள்ள நடுத்தர மக்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு அளவிற்கு உயரும். இந்த அமைதிப் புரட்சி அரசியலில் பல்வேறு மாற்றங்களை அவ்வப்போது நிகழ்த்தி வந்துள்ளது.
பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் நிலை கடந்த காலங்களில் பல்வேறு மாறுதலுக்கு இதுதான் காரணம். 1947 முதல் 1991க்கு இடைப்பட்டக் காலக்கட்டத்தில் நடைபெற்ற தொழில் புரட்சியில் இந்தியா பங்கேற்க முடியாததற்குக் காரணம், ஆட்சி அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு அதிகாரிகள் ஆதிக்கத்தில் சிக்கியதால்தான். இந்த நிலை 1991க்குப் பின்னர் மாறியது.
அதுவரை அடைப்பட்டு இருந்த பொருளாதார வாசல்கள் சந்தைப் பொருளாதாரத்திற்கு திறந்துவிடப்பட்டது. தனி பொருளாதாரமாக 50 ஆண்டுகளாக நீடித்த பல்வேறு நாட்டுப் பொருளாதாரங்கள் கடந்த 10 ஆண்டுகளில் (1990-2000) திறந்துவிடப்பட்டதன் மூலம் ஒரே பொருளாதாரக் குடையின் கீழ் வந்தது. இந்திய பொருளாதார தாராள மயமாக்கலும் இந்த அடிப்படையிலேயே உருவானது. இந்த தாராள மயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நீண்ட காலமாக இந்திய மக்களையும், இந்திய நிறுவனங்களையும் கட்டுப்படுத்தி வந்த கட்டுப்பாட்டு முறைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. தேசிய அளவில் மன அளவில் மிகப்பெரிய மாற்றம் உருவானது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை இந்தச் சந்தைப் பொருளாதாரம் உருவாக்கியுள்ளது.
நமது நாட்டில்தான் வணிகத்திற்கென்றே ஒரு சாதி உள்ளது. கூட்டு வட்டி என்றால் என்னவென்று அறிந்தே பிறக்கும் பனியாக்கள் கொண்ட நமது சமூகம் தாராள மயமாக்கலை தனது முன்றேத்திற்கு பயன்படுத்திக் கொண்டது. கூட்டு வட்டியை முதலீடாக்கத் தெரிந்தவர்கள் பனியாக்கள். இதற்கு மறுபெயர்தான் உலகமயமாக்கல்.
சர்வதேச அளவில் உற்பத்தி மற்றும் தொழில் பொருளாதாரம் அறிவுசார் பொருளாதாரமாக மாறியது இந்த மாற்றத்திற்கான இரண்டாவது காரணியாகும். தகவல் தொழில்நுட்பப் பொருளாதாரத்தில் இந்தியர்களின் சாதனைகள் உலகில் உள்ள ஒவ்வொருவராலும் ஆச்சரியப்படத் தக்க வகையில் அமைந்தது. இந்தப் புதிய பொருளாதாரத்தில் சாதனையை நிகழ்த்த முடியாத பிற நாட்டு மக்கள் அதற்கான காரணத்தைக் கூட இன்னும் கண்டறிய முடியாத நிலையிலேயே இருந்து வருகின்றனர். இந்தியர்கள் ஒட்ட வைப்பவர்கள் அல்ல, மாறாக சிந்தனையாளர்கள். இதுதான் நாம் தொழில் புரட்சியில் சாதனை படைக்க தடையாக இருந்தது.
தொழில் புரட்சியின் போது ஒட்ட வைக்கம் திறனுடைவர்கள் அறிவாற்றல் உள்ளவர்களையும், உடலுழைப்பாளர்களையும் ஒருங்கிணைத்து வெற்றி கண்டனர்.இந்த வகையிலேயே தொழில் புரட்சி பல்வேறு இடங்களில் அரங்கேறியது.
இந்தியாவைப் பொருத்தமட்டில் அறிவுசார்ந்த தொழில்களை தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் பிராமண சமுதாயத்தினர். மற்ற சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்ட அனைத்து சாதி மக்களும் தங்களுடைய நிலங்களிலேயே உழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். இது நமது சமுதாயத்தில் மிகப் பெரிய பிளவை ஏற்படுத்தியிருந்தது.
இதில் இருந்து விடுபடும் வகையில் படிப்படியாக உடலுழைப்பு சார்ந்த தொழில்களில் சில புதிய அணுகுமுறைகளை நாம் அறிமுகப்படுத்தத் துவங்கியிருந்தோம். ஆனால் மோசமான அரசியல் கோட்பாடுகள் மற்றும் அதிகாரிகளின் வறட்டுப் பிடிவாதம், கோட்டா முறை ஆகியவை இந்தியாவை தொழில் புரட்சியில் பங்கேற்க விடாமல் செய்துவிட்டது.
தொழில் புரட்சியின்போது எந்த பிராமண ஆதிக்கம் நம்மை வளர்ச்சிப் பாதையில் செல்ல தடுத்ததோ அதுதான் இன்று அறிவுப்புரட்சி காலத்தில் இந்தியாவை முன்னணியில் மிளிரச் செய்துள்ளது.
மென்பொருள் துறையில் இந்தியாவின் இந்த சாதனைக்குக் காரணம் அதுதான். நாம் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தோம். அதனைத் தொடர்ந்து 2500 ஆண்டுகளாக உபநிஷதங்களின் பிடியில் சிக்கிக் கிடந்தோம். பெரும்பாலும் ஆன்மீகத்திற்குள்ளேயே நாம் சிக்கியிருந்ததால் இன்று கணினி உலகில் நாம் சிறந்து விளங்க முடிகிறது.
எப்படி ஆன்மீக ஞானம் கண்ணுக்குப் புலப்படாததோ அதைப்போன்றததுதான் கணினி உலகமும் என்பதால் நம்மால் அதில் சாதனையை மேற்கொள்ள முடிகிறது.
தகவல் தொழில்நுட்பத்தை பொறுத்தமட்டில் நாம் நம்முடைய போட்டித் திறனை தெரிந்துகொண்டதன் விளைவு நம் நாடு இன்று தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் முன்னணியில் உள்ளது. இது நம் நாட்டின் வளர்ச்சியை பயனுள்ளதாக புதிய பரிணாமத்துடன் மாற்றியுள்ளது. இணையதளம் இந்திய தொழில் முனைவோர்களின் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. மேற்கண்ட இரண்டு சர்வதேச மாற்றமும், எதிர்காலத்தில் இந்திய பொருளாதாரம் வெற்றிபெற ஏதுவான சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளது.
அதிகரித்துவரும் மத்திய தர வர்க்கத்தில் உருவாகியுள்ள நம்பிக்கை, இந்தியாவில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள வறுமை சிக்கலை தீர்ப்பது தொடர்பான பிரச்சனைகளில் நல்ல நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும்.
1980க்கு முன்னர் நம்முடைய பொருளாதார வளர்ச்சி ஆண்டிற்கு 3.5 விழுக்காடு என்ற நிலையிலேயே இருந்ததுதான் இந்தியா வறுமையில் சிக்க காரணமாக அமைந்தது. வறுமையை ஒழிக்க வறுமை ஒழிப்புத் திட்டங்கள் போதுமானது அல்ல. மாறாக, வளர்ச்சிதான் அதற்கு சரியான மருந்தாகும். நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சியுடன் நல்ல பள்ளிக் கூடங்கள் மற்றும் அனைத்து வசதிகளுடன் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவை நாட்டில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களும் எளிதில் பெற்றுக்கொள்ள நம்முடைய உள்கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும். அந்த வகையில்தான் கல்வி மற்றும் சுகாதாரத்துறை நாட்டின் மற்ற எல்லாத் துறைகளையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. ஆனால், இத்துறைகளை நாம் மோசமான நிலையில் விட்டுவைத்திருப்பதற்குக் காரணம், மோசமான அரசியல்வாதிகள்தான்.
இந்தியாவை நான் யானை என்று கூற விரும்புகின்றேன். புலி அல்ல. அதற்குக் காரணம் இந்தியா முதல் முதலாக சுதந்திரத்தைப் பெற்றது. பின்னர் முதலாளித்துவத்திற்கு மாறியது. 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற நாம் 1991 ஆம் ஆண்டு வரை சந்தைப் பொருளதாரத்திற்கு மாறாமல் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு பொருளாதாரத்தையே நடைமுறைப்படுத்தி வந்துள்ளோம். அமெரிக்காவைத் தவிர உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே எதிர் வழியையே தேர்ந்தெடுத்தன.
நம்முடைய பொருளாதார வளர்ச்சியில் நாம் விரைவாக வளர முடியாமலும், வறுமை, கல்வி அறிவின்மை ஆகியவற்றை தீர்க்க வழி தெரியாமலும் நீண்ட காலத்தை விரயமாக்கியுள்ளோம். இதற்கு உண்மையான காரணம், சுதந்திரம்தான் நம்முடைய வளர்ச்சியை காலதாமதப்படுத்தி உள்ளது. நம்முடைய கொள்கைகளை மாற்ற முடியாமல் நீண்ட காலம் இழுத்தடித்துள்ளோம். அதற்குக் காரணம், ஒரு முடிவின் மேல் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான கருத்து இருந்ததே. எனவே, நம்முடைய சீர்திருத்த நடவடிக்கைகள் எல்லாம் மெதுவாக நடைபெறத் தொடங்கின. தற்போது இந்தியா என்ற யானை வேகமாக நடைபோடத் துவங்கியுள்ளது.
சீனாவை விட பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியிருந்தாலும், நம் நாட்டின் பொருளதாரம் உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் 2வது என்ற நிலையில் உள்ளது. சீனா விரைந்து வளர்ச்சி பெற்று வருவது குறித்து நாம் கவலையடையத் தேவையில்லை. இந்த வளர்ச்சிப் போராட்டத்தின் இறுதியில் சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான போட்டி தொடரும். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சுதந்திரத்துடன் கூடிய 7 விழுக்காடு வளர்ச்சியாக ஆண்டிற்கு உள்ளது. ஆனால், சீனாவில் சுதந்திரமற்ற பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடா உள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் சுதந்திரமான பொருளாதாரம் நீடிக்க வேண்டும் என்று வாக்களிக்கின்றனர். எனவே வளர்ச்சியில் சீனாவிற்கும், நமக்கும் இடையே 2 விழுக்காடு வேறுபாடு நிலவுகிறது. இது சீனாவைவிட நாம் 25 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் இருப்பதைத்தான் காட்டுகிறது. ஜனநாயகத்தின் பலன்தான் இது. இதற்கு உண்டான விலையைக் கொடுக்க பெரும்பாலான இந்தியர்கள் தயாராகவே உள்ளனர்.
3000 ஆண்டுகளாக இந்த வேளைக்காகத்தான் நாம் காத்திருந்தோம். பொருளாதார வளர்ச்சியின் வாயிலாகவும், முன்னேற்றதின் மூலமாகவும் விரைவில் வறுமை அற்ற வளமான ஜனநாயக சமுதாயத்தை பரந்த அளவில் நம் நாடு உருவாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
(முக்தா பாரத் என்ற புத்தகத்தை எழுதிய குர்ஷாரன் தாஸ் புராக்டர் & காம்பிள் இந்தியா நிறுவனத்தின் தலைவராகவும், மேலான் இயக்குனராகவும் இருந்தவர்)