திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில் 1886 ஆம் ஆண்டு வாஞ்சிநாதன் பிறந்தார். இவரது தந்தை ரகுபதி ஐயர், தாயார் ருக்மணி அம்மாள்.
வாஞ்சிநாதனுக்கு பெற்றோர்களால் சங்கரன் என்றே பெயர் சூட்டப்பட்டது. வாஞ்சிநாதன், தனது பள்ளிப் படிப்பை செங்கோட்டையிலும், பட்ட படிப்பை கேரளாவிலும் முடித்தார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே திருமணத்தை முடித்து அரசாங்க வேலை பார்த்து வந்தார். இவரை பலரும் வாஞ்சி என்றே அழைத்தனர்.
இந்திய நாடு ஆங்கிலேயே அரசாங்கத்திடம் அடிமைப்பட்டுக் கொண்டிருந்ததை கண்டு வெகுண்டு எழுந்தார். கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சி, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் வீர முழக்கத்தினை கேட்டு, தன்னையும் விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்.
ஒரு கட்டத்தில் தனது அரசு வேலையை உதறிவிட்டு முழு நேர சுதந்திரப்போராட்ட வீரராகவே மாறினார். புதுச்சேரியில் வ.வே.சு.ஐயர், சுப்ரமணிய பாரதியார் ஆகியோரின் சந்திப்புகள், இவருக்கு மேலும் ஊக்கத்தை தந்தது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு கப்பலை வாங்கி அதை வெற்றிகரமாக ஓட்டி, ஆங்கிலேயர்களுக்கு பெருத்த நெருக்கடியை ஏற்படுத்தியவர் திரு.வ.உ.சிதம்பரனார். இவர் சுதேசி இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தியவர்.
அந்த நேரத்தில் ஆங்கிலேய கலெக்டராக இருந்தவர் ஆஷ்துரை. அவரின் கட்டளையை எதிர்த்து சுதேசி போராட்ட வெற்றியை கொண்டாடினர். இதனால் ஆஷ்துரைக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது.
இதனால், வ.உ.சிதம்பரனாரையும், சுப்பரமணிய சிவாவையும் கைது செய்து சிறையில் அடைத்தான் ஆஷ்துரை. மேலும், 40 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களின் கைதால் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கலவரம் பரவியது. கலவரத்தை அடக்க ஆஷ் துரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, துப்பாக்கிச் சூட்டை நடத்தினார். இதில் நான்கு போராட்ட வீரர்கள் பலியாயினர்.
இந்த நிகழ்விற்கு பிறகு வீறு கொண்டு எழுந்த வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக்கொல்ல தீர்மானித்தார். சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த வாஞ்சிநாதன், 1911 ஜூன் 17 ஆம் தேதி வாஞ்சி நாதன் கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக்கொன்றார்.
பின்னர், தன்னை பிடிக்க வந்த ஆங்கிலேயர்களிடம் சிக்கி, உயிரிழப்பதை அவமானமாக கருதி தன்னத்தானே சுட்டுக்கொண்டு தனது இன்னுயிரை தேசத்திற்காக தியாகம் செய்தார்.