ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

சனி, 1 செப்டம்பர் 2018 (14:56 IST)
மாதா, பிதா, குரு, தெய்வம்' என இந்தியாவில் பெற்ற தாய் - தந்தைக்கு அடுத்த இடத்தை ஆசிரியருக்கு வழங்கி இருக்கிறார்கள். ஆசிரியருக்கு அடுத்த இடம்தான் இறைவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆசிரியர் திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.
 
தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண  குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும்  பெற்றவர். 
 
சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத்  தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும்  பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே  அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.
 
இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் இருந்த ராதாகிருஷ்ணன நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். இவரைப் பல்வேறு விருதுகள் தேடி வந்தன. இள வயதிலேயே ராதாகிருஷ்ணன் பல நூல்களை எழுதித் தனது எழுத்தாற்றலை அனைவரும் அறியும்படி செய்தார். இவர் மேடைப் பேச்சிலும்  வல்லவர். வெளிநாடுகளில் அவர் ஆற்றிய சிறப்புரைகள் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தன. டாக்டர் ராதா கிருஷ்ணனுக்கு அவருடைய சேவையை பாராட்டி  133 கௌரவ டாக்டர் பட்டங்கள் வரை கிடைத்துள்ளன.
 
நாட்டின் 2-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் பதவி காலம் முடிந்ததும், சென்னை மைலாப்பூரில் உள்ள  அவருடைய சொந்த பங்களாவில் எளிமையாக இறுதி காலம் வரை வாழ்ந்தார். இவர் 1975, ஏப்ரல் 17-ம் தேதி மறைந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்