தமிழகத்தில் கூட்டணி ஆட்சி - அரசியல் ஆர்வலர்கள் ரகசிய முயற்சி

கே.என்.வடிவேல்

செவ்வாய், 5 மே 2015 (16:04 IST)
தமிழகத்தில் திமுக, அதிமுக தவிர மற்ற ஏனைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. மேலும், அதற்கான முயற்சிகளையும் தமிழகத்தில் உள்ள சில அரசியல் ஆர்வலர்கள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
 

 
இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள சிலரிடம் இது பற்றி கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:-
 
தமிழகத்தில் திமுக, அதிமுக -வின் தனிப் பெரும்பான்மை ஆட்சிக்கு மாற்றாக ஒரு மாற்று அரசியல் தற்போதைக்கு தேவைப்படுகின்றது என்றும், தமிழகத்தில், கூட்டணி ஆட்சி என்ற திருமாவளவன் கருத்தை வைகோ, ஜிகேவாசன் போன்றோர் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.
 
மேலும், ஜி.கே.வாசன், வைகோ, திருமாவளவன், வேல்முருகன், நல்லகண்ணு, தா.பாண்டியன், ஜி.ராமகிருஷ்ணன், கிருஷ்ணசாமி போன்ற அரசியல் கட்சிகள் தலைவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு தங்களுக்குள் ஒரு ஒற்றுமையை உறுதி செய்ய வேண்டும். இதனையடுத்து, இவர்கள் இணைந்து கூட்டணி குறித்து ஆரோக்கியமான பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும்.
 
மூன்றில் ஒரு பங்கு தொகுதி, தேர்தலுக்கு பின்பு கூட்டணி ஆட்சி என பொது செயல்திட்டத்தின்படி ஆட்சி அமைய வேண்டும் என்பதை தெளிவாக பேச வேண்டும். எனவே, தமிழக அரசியல் கட்சிகள் இனிமேல் தனித்து ஆட்சி என்ற கோஷத்திற்கு  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
 
இந்த கோரிக்கையை முன்வைத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு இவர்கள் பேசி வருவதாக தெரியவருகின்றது. இந்த முயற்சியை இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்று அவர்களும் தங்களது பங்கிற்கு உதவி செய்து வருகின்றார்களாம். ஆனாலும், இந்த முயற்சி எந்த அளவு தமிழக அரசியலில் சாத்தியம் என்பது போகப்போகவே தெரியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்