மாற்றுத்திறனாளிகள் தினம்; வாய் வாழ்த்து மட்டும் போதுமா?

செவ்வாய், 3 டிசம்பர் 2013 (17:53 IST)
இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம். இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நிலை பற்றித் தெரிந்து கொள்ள கல்லூரிகளில் படித்துவரும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் உங்களின் தேவை என்ன, அரசிடமிருந்தோ அல்லது இந்த சமூகத்திடமிருந்தோ நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்று கேட்ட போது அவர்கள் கூரியதாவது, எங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காக அரசு பல சலுகைகளையும், வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க இட ஒதுக்கீடும் அளிக்க வேண்டும்.

குறிப்பாக, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தில்(TNPSC) மற்றுத்திறனாளிகளுக்காக 3 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடஒதுக்கீடும் இதுவரை சரிவர பின்பற்றப்படவில்லை. அந்த 3 சதவிகித இடஒதுக்கீட்டை முறைப்படுத்தி மாற்றுத்திறனாளிகள் முழுமையாக பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
FILE


தமிழக அரசின் ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் டெட்(TET) தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்காக மற்ற மாநிலங்கள் பின்பற்றும் 60 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி என்ற சிறப்பு சலுகையை தமிழக அரசும் அளிக்க வேண்டும். இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவித சலுகையும் செய்யப்படாததால், பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதனால் அரசு கருணை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

டெட்(TET) தேர்வில் 60 சதவிகிதம் தேர்ச்சி மதிப்பெண் என்ற சிறப்புச் சலுகை கேட்டதற்கு அரசு ஊடகங்களின் வாயிலாக தெரிவித்ததாவது, மாற்றுத்திறனாளிகளுக்கு 60 சதவிகிதம் தேர்ச்சி மதிப்பெண் என்ற சலுகை அளிக்க வாய்ப்பில்லை, 70 அல்லது 80 சதவிகிதம் தேர்ச்சி மதிப்பெண் அளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், மேலும் டெட்(TET) தேர்வு எழுத விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்ச்சியுடன் கூடிய தனித்தேர்வு நடத்துவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை அரசின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகையோ அல்லது பயிற்சியுடன் கூடிய தனித் தேர்வு நடத்த அதிகாரப்பூர்வ அரசாணையோ எதுவும் அரசால் வெளியிடப்படவில்லை.

FILE
கை, கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அவர்களுக்கென்று வடிவமைக்கப்பட்ட மோட்டார் வாகனங்கள் வழங்குகிறார்கள். இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தமிழக அரசால் மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அது போலவே முதுகலை மற்றும் ஆய்வு படிக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் அரசு மடிக்கணினி வழங்க வேண்டும்.

பி.எட்.(B.ed) முடித்து வேலையில்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் தற்போது வழங்கப்படும் ஆண்டிற்கு ரூ.6500 என்ற உதவித் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும்.

நெட் மற்றும் ஸ்லெட் முடித்த பட்டதாரி மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் படித்த தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு கல்லூரிகளில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். புத்தகம் கட்டுநர் (Book binding) என்று சொல்லப்படுகிற பைண்டிங் வேலையும், இசைக் கல்லூரிகளில் தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பும் அரசு வழங்க வேண்டும்.

பொதுவாக அரசு வேலையில் 35 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. அரசு வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த நிபந்தனையில் இருந்து 10 ஆண்டுகள் விலக்கு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் படித்து முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோரும் வழங்கப்பட்டு வரும் ரூ.400 உதவித் தொகையை ரூ.2000 ஆக அரசு உயர்த்த வேண்டும்.

பள்ளி, கல்லூரி படிப்பு மற்றும் மேல்படிப்புகள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு படிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் வேலைவாய்ப்பில் மட்டுமே இடஒதுக்கீடு சரவர பின்பற்றப்படவில்லை. தற்போது இருக்கின்ற இடஒதுக்கீட்டை அரசு முழுமையாக பின்பற்றினாலேயே மாற்றுத்திறனாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு வேலை கிடைக்கும்.

இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான கோரிக்கைகள், சலுகைகள், உதவித்தொகை எதுவுமே போராடாமல் கிடைத்ததில்லை. கல்வி உதவித்தொகையும் போராடியே பெற்றோம்.
FILE


இதுபோல அரசாங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த ஒரு சலுகையோ அல்லது இடஒதுக்கீடோ செய்ய தாமாக முன்வரவில்லை. அப்படி செய்யும் பட்சத்தில் அரசு அதிகாரிகள் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். மேலும் பல மத்திய மற்றும் மாநில அரசுகளின் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றும் பணிகள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றனர். உங்களால் எப்படி மற்றவர்களை போல வேலை பார்க்க முடியும் என்று கேட்கிறார்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகள் நடத்திய உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் குறித்து கேட்ட போது, எங்களது உரிமைகளுக்காக 9 அம்சக் கோரிக்கையை முன்வைத்து நாங்கள் போராடினோம், ஆனால அப்போராட்டத்தை தமிழக அரசு காவல்துறையின் மூலம் முடக்கினார்கள். அப்போராட்டத்தின் போது தமிழக காவல்துறை எங்களை பார்வையற்றவர்கள் என்று கூட பாராமல் எங்கள் மீது கடுமையாக நடந்து கொண்டது.

அப்போராட்டத்தில் கைது செய்யப்பட்ட எங்களைப் போன்ற பார்வையற்றவர்களை நள்ளிரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் கொண்டு போய் இறக்கி விட்டார்கள். போராட்டத்தின் போது சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை விட 12 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்த 9 மாற்றுத்திறனாளிகளைத்தான் காவல்துறையினர் கடுமையாக கையாண்டனர். இந்த செயலை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் எங்களின் கோரிக்கைகளை அலட்ச்சியமாகவே அரசும் மற்ற துறை அதிகாரிகளும் கையாளுகிறார்கள் என்று அவர்கள் கூறினர்.

இவர்கள் கூறுவதிலிருந்து, மாற்றுத்திறனாளிகள் தினத்தில் வெருமனே வாய் வார்த்தையில் மட்டும் வாழத்துவது இவர்களை சந்தோசப்படுத்திவிட முடியாது என்று தெரிகிறது. மாற்றுத்திறனாளிகளும் சாதாரண மனிதன் போல வாழ இங்கு வழி வகை செய்ய வேண்டும். இதற்கு அரசு பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்க்கொண்டால் அவர்களின் வாழ்க்கையில் ஊனத்தையும் தோற்கடிக்கும் நம்பிக்கை பிறக்கும் என்று இவர்களுடன் பேசியதிலிருந்து நன்றாக புரிகிறது.