இந்த ஆஷஸ் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் மாறி மாறி ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடருக்கு ஆஷஸ் என பெயர் வர ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.
1882 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி ஓவலில் நடைபெற்ற தொடரில் இங்கிலாந்தை வென்றது. அதனை ஆங்கிலேயே ஊடகங்கள் “இங்கிலாந்து கிரிக்கெட் மரணமடைந்துவிட்டது. அதன் உடல் எரிக்கப்பட்டு, அதன் சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு எடுத்து செல்லப்படுகிறது” எனக் கடுமையாக விமர்சித்து எழுதினார்கள்.
இதனால் அவமானப்பட்ட இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்று டெஸ்ட் தொடரை வென்றது. அப்போது அணியின் கேப்டன் ஐவோ பிளிக் “இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை மீண்டும் இங்கிலாந்துக்கே கொண்டு வருகிறோம்” எனக் கூறி பெருமிதப்பட்டார். இங்கிலாந்து திரும்பிய அணிக்கு சாம்பல் நிறைந்த ஒரு பெட்டகத்தை சில பெண்கள் பரிசாக அளிக்க அன்றிலிருந்து சாம்பலை குறிக்கும் ஆஷஸ் என்ற வார்த்தை பயன்படுத்தப் படுகிறது.