”டெண்டுல்கருடன் களமிறங்குவது சிங்கத்துடன் காட்டில் நடமாடுவதைப் போன்றது” - ஷேவாக்

செவ்வாய், 7 ஏப்ரல் 2015 (18:35 IST)
டெண்டுல்கருடன் களமிறங்குவது சிங்கத்தின் துணையுடன் காட்டில் நடமாடுவதைப் போன்றது என்று முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர ஷேவாக் கூறியுள்ளார்.
 
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வீரேந்திர ஷேவாக் கலந்து கொண்டார். அப்போது சச்சின் டெண்டுலகருடன் களமிறங்கிய அனுபவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷேவாக், “டெண்டுல்கருடன் களமிறங்குவது சிங்கத்தின் துணையுடன் காட்டில் நடமாடுவதைப் போன்றதொரு நம்பிக்கையை அளிக்கும்.
 

 
என்னை எவரும் தொட முடியாது. இந்த நம்பிக்கை டெண்டுல்கரிடம் இருந்துதான் பெற்றுக்கொண்டேன். ஒருமுறை டெண்டல்கரிடம் கூறினேன், ’அவர்கள் ஷேவாக்கைப் பற்றியோ, டெண்டுல்கரைப் பற்றியோ கவலைப்படமாட்டார்கள். அவர்களது ஒரே கவலை டெண்டுல்கரை எவ்வாறு வெளியேற்ற வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்’ என்று.

இதுதான் எனது பாணியில் என்னை விளையாட வைத்தது. 2011 உலகக்கோப்பை முன்னதாக என்று நினைக்கிறேன். அப்போது டெண்டுல்கர் என்னிடம் கூறும்போது ’அவர்களுக்கு டெண்டுல்கரை பற்றி கவலை இல்லை. ஷேவாக்கைப் பற்றிதான்’ என்றார்.
 

 
இதுதான் எங்கள் இருவருக்குமிடையில் உள்ள நம்பிக்கை. அவர் எனக்கு எப்போதுமே உதவி வந்திருக்கிறார். எப்படி பொது இடத்தில் நடந்துகொள்ள வேண்டும், எப்படி ஆட்டத்தை பார்க்க வேண்டும், எப்படி ஆட்டத்திறனை மேம்படுத்த வேண்டும் என்று கூறுவார்.
 
ஒருதடவை நான் ரன்கள் குவிக்கத் தவறிவிட்டு அழுத்ததில் இருக்கும்போது, ’உனது தாய் தந்தையருக்காக விளையாடுவதாக எண்ணிக் கொள். உனது தாய், தந்தையர் உன்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து விளையாடு’ என்று கூறுவார்”.
 
இவ்வாறு வீரேந்திர ஷேவாக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்