சங்ககாரா சாதனை முறியடிப்பு; சச்சின் சாதனை சமன் : மிரட்டும் விராட் கோலி

செவ்வாய், 25 அக்டோபர் 2016 (12:26 IST)
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் விளாசியதன் மூலம் சங்ககாரா சாதனையை முறியடித்ததோடு, சச்சினின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.
 

 
நேற்று முன்தினம் [ஞாயிற்றுக்கிழமை]  நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி 154 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
 
மேலும், இந்த சதம் அவருடைய 26ஆவது சதமாகும். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் குவித்தவர்கள் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் [49], ரிக்கி பாண்டிங் [30], சானத் ஜெயசூர்யா [28] ஆகியோருக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார்.
 
மேலும், சங்ககாரா 25 சதங்கள் குவித்து இருந்தார். இந்த சாதனையை விராட் கோலி முறியடித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். தவிர, குறைந்த இன்னிங்ஸில் 26 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை விளாசியவர்களில் முதல் இடத்தில் உள்ளார். 166 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
 
சச்சின் சாதனை சமன்:
 
விராட் கோலி, இதுவரை அணியின் வெற்றிக்கு காரணமான சதமாக 22 சதங்களை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக மூன்று பேர் அணியின் வெற்றிக்கான அதிகப்பட்ச சதங்களை பதிவு செய்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் [33], ரிக்கி பாண்டிங் [25], சானத் ஜெயசூர்யா [24] ஆகியோர் வெற்றிச் சதங்களை பதிவு செய்துள்ளனர்.

துரத்திப் பிடித்து [Chasing] அணியை வெற்றிபெற செய்யும் வகையிலான சதமாக விராட் கோலி 14 சதங்களை அடித்துள்ளார். இதில் சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார். சச்சினும் 14 சதங்களையே விளாசியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்