இந்திய அணியில் ஆக்ரோஷமாக செயல்படும் வீரர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீசாந்த். இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011 ஆகிய இரு தொடர்களிலும் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இவர் ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சொல்லி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார். அதன் பின் சட்ட ரீதியாக பல போராட்டங்களை நடத்தி 7 ஆண்டுகாலமாக அதை குறைத்தார். இப்போது அவரது தண்டனைக் காலம் செப்டம்பர் மாதத்தோடு முடியும் நிலையில் உடல்தகுதியை நிரூபித்தால் அவர் கேரள ரஞ்சி அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
இந்நிலையில் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் அவர் கேரள அணிக்காக விளையாடிவருகிறார். இதன் முதல் போட்டியிலேயே தனது முதல் விக்கெட்டை அவர் கைப்பற்றியுள்ளார். கடந்த 2,804 நாட்களாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்த ஸ்ரீசாந்த், இப்போது தனது முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். மும்பையில் நடந்த புதுச்சேரி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்த போட்டியில் கேரள அணி வெற்றி பெற்றது.