உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்கா இமாலய ரன் குவிப்பு : டிவிலியர்ஸ் அசத்தல் சதம்

வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (14:52 IST)
இன்றைய உலகக் கோப்பையின் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தனது அசத்தலான பேட்டிங் மூலம் இமாலய இலக்கை எட்டியுள்ளது. 
 
உலக கோப்பை போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.இதில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 
அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குயின்டன் டி காக் மற்றும் ஆம்லா தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். தொடக்கத்திலேயே  குயின்டன் டி காக் 12 ரன்னில் வெளியேறினார். பின்னர் தென் ஆப்பிரிக்க அணி 10 ஓவர்களில் வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய ஆம்லா அரைசதத்தை எட்டினார். மறுமுனையில் டுபிளசியும் ஆம்லாவிற்கு ஆதரவாக அரைசதத்தை கடந்தார்.
 
சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட டுபிளசி 62 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ஆம்லாவும் 65 ரன்னில் வெளியேறினார். மேற்கண்ட இவ்விரு வீரர்களையும் ஒரே ஓவரில் கிறிஸ் கெய்ல் அவுட்டாகினார் என்பது கூடுதல் சிறப்பு. பின் வந்த ரோசாவ், டிவிலியர்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் வேகத்தை அதிகரித்தது. எனினும் ரோசாவ் 61 ரன்னில் அவுட்டானார். 
 
தொடர்ந்து விளையாடிய டிவிலியர்ஸ் அதிரடியாக செயல்பட்டு 52 பந்துகளில் சதத்தை எட்டினார். உலக கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த வரிசையில் டிவில்லியர்ஸ் இரண்டாவது இடத்தை பெற்றார்.  மேலும் சிறப்பாக செயல்பட்ட  டிவிலியர்ஸ் 66 பந்துகளில் 162 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 
 
இறுதியில் தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 408 ரன்கள் எடுத்தது. இந்த இமாலய இலக்கு மூலம் தென் ஆப்பிரிக்க அணி உலக கோப்பை வரலாற்றில் எடுத்த அதிகமான ரன் ஆக அமைந்தது. தென் ஆப்பிரிக்க அணி கடைசி 10 ஓவரில் 150 ரன்களை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்