அனைத்துவித கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஷேவாக் ஒய்வு

செவ்வாய், 20 அக்டோபர் 2015 (15:54 IST)
இந்திய அணியின் அதிரடி வீரர் வீரேந்திர ஷேவாக் ஐபிஎல் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
 

 
இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்த மட்டில் வீரேந்திர சேவாக்குக்கு முன்பு, சேவாக்குக்கு பின்பு என்று வரைமுறைப்படுத்திக் கூறலாம். இதற்கு அவர் தகுதியானவரும் கூட...
 
சச்சின் மட்டுமே கோலோச்சிய காலத்தில், தனது ருத்தர தாண்டவத்தால் ரசிகர்களை பரவசப்படுத்திய சேவாக் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்தவர்.
 
தனது மாயாஜால பேட்டால் பந்துகளை துவம்சம் செய்த சேவாக், அவுட் ஆப் பாஃர்ம் காரணமாக நீண்ட காலமாக இந்திய அணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு இருந்தார். இதனிடையே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து சேவாக் ஓய்வு பெறப் போவதாக தகவல் வெளியானது.
 

 
இந்நிலையில் தற்போது தனது ஓய்வு குறித்து ட்விட்டரில் அறிவித்துள்ளார். இது குறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நான் ஐபிஎல் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.
 
எனக்கு அன்பும் ஆதரவும் அளித்த ஒவ்வொருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். இன்று அவருடைய 37 ஆவது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய அணிக்காக வீரேந்திர ஷேவாக் 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 8273 ரன்கள் குவித்துள்ளார். இதில் 15 சதங்களும், 38 அரைச் சதங்களும் அடங்கும். அதிகப்பட்சம் 219 ரன்கள். 93 கேட்சுகள் பிடித்துள்ளார்.
 
அதேபோல, 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8586 ரன்கள் குவித்துள்ளார். இதில் 23 சதங்களும், 32 அரைச் சதங்களும் அடங்கும். அதிகப்பட்சம் 319 ரன்கள். 91 கேட்சுகள் பிடித்துள்ளார். மேலும், 19 டி 20 போட்டிகளில் விளையாடி 394 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 அரைச் சதங்களும் அடங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்