அஸ்வினின் சுழலில் மாயமானது நியூசிலாந்து: 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

செவ்வாய், 11 அக்டோபர் 2016 (17:16 IST)
இந்தூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
 

 
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 557 ரன்கள் குவித்தது..
 
இதில், அதிகப்பட்சமாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி 211 ரன்களும் [20 பவுண்டரிகள்], ரஹானே 188 ரன்களும் [18 பவுண்டரிகள்] எடுத்தனர்.
 
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 299 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக மார்டின் கபதில் 72 ரன்களும், ஜேம்ஸ் நீசம் 71 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அஸ்வின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, இரண்டு வீரர்களை ரன் அவுட் மூலம் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
 
பின்னர், இந்திய அணி 258 ரன்கள் முன்னிலையோடு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அதில், புஜாராவின் சதத்தோடு 216 ரன்களில் டிக்ளேர் செய்வதாக இந்திய அணி அறிவித்தது.
 
பின்னர், 475 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. ஆனால், தொடக்க ஆட்டக்காரர் லாதமை ஜடேஜா வெளியேற்ற நியூசிலாந்து அணியின் சரிவு தொடங்கியது.
 
மேலும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மாய வித்தை காட்டினார். 4 போல்டுகள் உட்பட 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து, நியூசிலாந்து அணி 153 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனால், நியூசிலாந்து அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

வெப்துனியாவைப் படிக்கவும்