பாகிஸ்தான் சாதனை வெற்றி; யூனிஸ்கான் அபார ஆட்டத்தால் தொடரை கைப்பற்றியது

புதன், 8 ஜூலை 2015 (22:54 IST)
யூனிஸ்கானின் அபார ஆட்டத்தால், பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
 

 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3ஆவது டெஸ்ட் போட்டி பல்லேகெலேவில் நடைபெற்றது.
 
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி, இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 278 ரன்கள் எடுத்தது. கருணாரத்னே 130 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் யாஷிர் ஷா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக சர்ஃப்ராஸ் கான் 78 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் தம்மிக்க பிரசாத், நுவன் பிரதீப், குஷல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
63 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இலங்கை அணி 2ஆவது இன்னிங்ஸில் 313 ரன்கள் குவித்தது. ஆஞ்சலோ மேத்யூஸ் 122, சண்டிமால் 67 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் இம்ரான் கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

 
இதனையடுத்து, 377 ரன்கள் வெற்றி இலக்காக களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டகாரர்கள் அஹ்மத் ஷெசாத் [0], அஹார் அலி [5] அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் இலங்கைப் பக்கம் வெற்றி திரும்புவது போல் இருந்தது.
 
ஆனால் மற்றொரு தொடக்க வீரர் மசூத் 125, மற்றும் மூத்த வீரர் யூனிஸ்கான் 171 ரன்களும் குவித்து வெற்றியை தட்டிப் பறித்தனர். இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் 2-1 என தொடரை கைப்பற்றியது.
 
டெஸ்ட் அரங்கில் முதல் முறையாக பாகிஸ்தான் அணி அதிக ரன்களை ‘சேஸ்’ செய்து சாதனை படைத்துள்ளது. ஆட்டம் இழக்காமல் 171 ரன்கள் குவித்த யூனிஸ்கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மூன்று போட்டிகளில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழல் மன்னன் யாசிர் ஷா தொடர் நாயகன் விருது பெற்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்