ரசிகர்களின் ரகளைக்கு இடையில் பாகிஸ்தான் அபார வெற்றி

திங்கள், 20 ஜூலை 2015 (15:22 IST)
இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், 3ஆவது ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமதசா மைதானத்தில் நடைபெற்றது.
 

 
இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அகமது ஹெசாத் (44) மற்றும் அசார் அலி (49)இருவரும் இணைந்து சிறப்பான தொடக்க அமைத்துக் கொடுத்தனர்.
 
பின்னர் களமிறங்கிய மொஹம்மது ஹஃபீஸ் (54), சர்ஃப்ராஸ் அஹ்மது (77), ஷோயப் மாலிக் (42) ரன்கள் குவித்தனர். இதனால், 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் மலிங்கா, பதிரணா இருவரும் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் தில்ஷன் (14), குஷல் பெரேரா (20), தரங்கா (16), மேத்யூஸ் (4), சண்டிமால் (18), சிறிவர்தனா (2) திசரா பெரேரா (12) என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக திரிமன்னே 56 ரன்கள் குவித்தார்.
 
பாகிஸ்தான் வீரர்கள் மீது கல்வீச்சு:
 
இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கிரிக்கெட் ரசிகர் ஒருவர், பாகிஸ்தான் வீரரை குறிவைத்து கல்வீசியதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் பலத்த பாதுக்காப்பிற்கு இடையில் மீண்டும் ஆட்டம் துவங்கப்பட்டது.
 

 
41.1 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், பாகிஸ்தான் அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 4 விக்கெட்டுகளையும், அன்வர் அலி, இமத் வாசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
ஆட்ட நாயகன் விருது 77 ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் சர்ஃப்ராஸ் அஹ்மதுவிற்கு வழங்கப்பட்டது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், பாகிஸ்தான் அணி 2-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்