தந்தை இறந்தது தெரிந்தும் போட்டியில் பங்கேற்றது ஏன்? - விராட் கோலி விளக்கம்
சனி, 7 மே 2016 (17:56 IST)
தனது தந்தை இறந்த போன தகவல் அறிந்தும் கூட போட்டியில் பங்கேற்றது ஏன் என்று இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக விராட் கோலி உருவெடுத்துள்ளார். பல இக்கட்டான சூழ்நிலையிலும், இந்திய அணியை தோல்வியில் இருந்து தனி ஆளாக மீட்டு எடுத்துள்ளார். இதனால், இந்திய அணியின் ’ரன் குவிக்கு இயந்திரம்’ என்று ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
ஆனால், அவரது இந்த உயர்விற்கு பின்னால், மிகப்பெரிய சோகமான சம்பவம் ஒன்று அரங்கேறியது. விராட் கோலி 2006ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்காக ஆடிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணயளிவில் அவரது தந்தை இறந்துவிட்டதாக தகவல் வந்தது.
ஆனாலும், அன்று காலை நடந்த கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கி ஆடினார். அந்தப் போட்டியில் 90 ஓட்டங்களை குவித்ததோடு டெல்லி அணி ’பாலே-ஆன்’ ஆவதில் இருந்தும் காப்பாற்றினார்.
இது குறித்து கூறியுள்ள கோலி, ”இன்றைக்கும் எனது நினைவில் இருக்கிறது. என்னுடைய தந்தை அன்று இரவு இறந்துவிட்டார். எனது வாழ்வின் மிகவும் கடினமான நாள் அதுதான்.
நான் காலை அந்தப் போட்டியில் விளையாடியது உள்ளுணர்வால் ஏற்பட்டது. என்னை பொறுத்தவரை போட்டியை பாதியில் விட்டுவிட்டு செல்வது பாவம் செய்வதற்கு சமமானது. கிரிக்கெட் எனது வாழ்வில் எல்லாவற்றையும் விட அவ்வளவு முக்கியமான ஒன்று.
எனது தந்தையின் மரணம் தந்த வலி, எனது கனவுகளை அடைய தேவையான வலிமையை தந்தது. எனது தந்தையின் கனவுகளையும் அதுதான் நிறைவேற்ற உதவியது” என்று கூறியுள்ளார்.