நியூசிலாந்து தொடக்க ஜோடிகளே 236 ரன்கள் குவித்து அபார வெற்றி

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (20:21 IST)
ஜிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டகாரர்களே 236 ரன்கள் குவித்ததில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
 

 
நியூசிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் செய்ய பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 
இதன்படி, பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர் மசகட்ஸா டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய எர்வின் (12), சகப்வா (2), சிகும்பரா (5) ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர். நிதானமாக ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சிபாபா 42 ரன்கள் எடுத்தார்.
 
இதனால், ஒரு கட்டத்தில் ஜிம்பாப்வே அணி 68 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இக்கட்டான நிலையில் களமிறங்கிய சிக்கந்தர் ரஸா அபாரமாக விளையாடினார். ரஸா 95 பந்துகளில் [5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 100 ரன்கள் எடுத்தார். இறுதியாக ஜிம்பாப்வே 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது.
 
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான மார்ட்டின் கப்திலும், டாம் லாதமும் இணைந்து ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். இதனால், இருவரும் 42.2 ஓவர்களில் 236 ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டனர்.
 
மார்ட்டின் கப்தில் 138 பந்துகளில் [11 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 116 ரன்களும், டாம் லாதன் 116 பந்துகளில் [7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்] 110 ரன்களும் குவித்தனர். ஜிம்பாப்வே அணித் தலைவர் சிகும்பரா 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.
 
சாதனைகள்:
 
நியூசிலாந்து அணியின் தொடக்க ஜோடி ரன் குவிப்பில் இரண்டாவது அதிகபட்சமாக இது அமைந்தது. இதற்கு முன்னதாக, 2008ஆம் ஆண்டு அயர்லாந்திற்கு எதிராக மெக்கல்லமும், மார்ஷலும் இணைந்து 274 ரன்கள் குவித்ததே அதிகப்பட்சமாகும்.
 
இந்த போட்டியில் 116 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணி வீரர் மார்ட்டின் கப்தில் 4 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் 4 ஆயிரம் ரன்களை கடந்த 10ஆவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்