பேட்டை உயர்த்திக் காட்டிய கோஹ்லி: 30 சதவீதம் அபராதம் வாங்கி கட்டிக்கொண்டார்

திங்கள், 29 பிப்ரவரி 2016 (10:56 IST)
சனிக்கிழமை நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி, இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்த நட்சத்திர வீரர் விராட் கோஹ்லிக்கு தனது போட்டி சம்பளத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


 
 
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் மோதும் ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் சனிக்கிழமை மோதின. பரபரப்பான இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா புரட்டி போட்டது.
 
இந்தியா வெற்றி பெற விராட் கோஹ்லி 49 ரன் எடுத்து பெரிதும் உதவினார். விராட் கோஹ்லி 49 ரன் எடுத்திருந்த போது முகமது சமி பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் நடுவரின் இந்த முடிவுக்கு விராட் கோஹ்லி ஆட்சேபம் தெரிவித்தார்.
 
பந்து தனது பேட்டில் உரசிக்கொண்டு போனதாக தனது பேட்டை உயர்த்திக் காட்டி நடுவரிடம் தனது ஆட்சேபனையை தெரிவித்தார் கோஹ்லி. கோஹ்லி பேட்டை உயர்த்திக் காட்டியது ஐசிசி நடத்தை விதிமுறைக்கு எதிரானது.
 
இந்த ஆட்டத்தின் போது நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக விராட் கோலிக்கு போட்டி சம்பளத்தில் 30 சதவீதம் அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்