ஜோஸ் பட்லர் 52 பந்துகளில் 116 ரன் குவிப்பு; பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து

சனி, 21 நவம்பர் 2015 (17:24 IST)
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 4ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
 

 
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 4ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 355 ரன்கள் குவித்தது. அலெக்ஸ் ஹேல்ஸ் 22 ரன்களில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜோசன் ராய் 117 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார். ஜோ ரூட் 71 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.
 
ஜோசன் ராய் மற்றும் ஜோ ரூட் இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 140 ரன்கள் குவித்தனர். பின்னர் களமிறங்கிய ஜோஸ் பட்லர் பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
 
30 பந்துகளில் அரைச்சதம் கடந்த ஜோஸ் பட்லர், 46 பந்துகளில் [8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்] சதமடித்து அசத்தினார். இதுவே இங்கிலாந்து வீரர் அடித்த அதிவேக சதமாகும். இதற்கு முன்னதாக இவர், நியூசிலாந்திற்கு எதிராக எடுத்த 61 பந்துகளில் சதமடித்ததே அதிவேக சதமாக இருந்தது.
 
பின்னர், களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 271 ரன்கள் மட்டுமே குவித்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக சோயப் மாலிக் 52 ரன்களும், பாபர் ஆஸம் 51 ரன்களும், அஸார் அலி 44 ரன்களும் குவித்தனர்.
 

 
இதனால் பாகிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து தரப்பில் மொய்ன் அலி மற்றும் ஆடில் ரஷித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரை 3 -1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினையும் ஜோஸ் பட்லர் கைப்பற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்