ராஜஸ்தான் அணிக்கு கடைசி ஓவர் த்ரில் வெற்றி!

சனி, 19 ஏப்ரல் 2014 (09:47 IST)
அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி நடு ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து கடைசியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்களை மட்டுமே எடுத்தது. தவான் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து வென்றது.
 
ரஹானே 59 ரன்களையும், ஸ்டூவர்ட் பின்னி 48 ரன்களையும் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணி சற்றும் எதிர்பாராதவிதமக அபிஷேக் நாயரை துவக்கத்தில் களமிறக்கியது. அவரோ இறங்கியவுடன் டேல் ஸ்டெய்ன் பந்தை கவர் திசையில் விளாசி பவுண்டரியுடன் துவங்கி அசத்தினார். ஆனால் நாயர் 3ஆம் பந்தில் ஆட்டமிழந்தார்.
சன் ரைசர்ஸ் ஐதராபாதின் ஸ்டெய்ன், புவனேஷ் குமார், இஷாந்த் சர்மா பந்து வீச்சு அபாரம். பந்துகள் நன்றாக ஸ்விங் ஆயின. இளம் ஸ்டார் என்று கருதப்படும் சஞ்சு சாம்சன் தடவு தடவென்று தடவி 4வது ஓவரில் மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 
இதன் மூலம் கேப்டன் வாட்சன், ரஹானே ஜோடி சேர்ந்தனர். 6வது ஓவரை புவனேஷ் குமார் அபாரமாக வீசினார். 3 அருமையான பந்துகளில் பீட்டன் செய்தார்.இதனால் வாட்சனை இஷாந்த் சர்மா வீழ்த்த ராஜஸ்தான் 31/3 என்று ஆனது.

இஷாந்த் ஆக்ரோஷமாக வீசினார். ஒருமுறை ரஹானேயின் ஹெல்மெட்டை பவுன்சரால் பதம் பார்த்தார். ரஹானே இன்னிங்ஸ் தடுமாற்றமாகவே இருந்தது. ஏகப்பட்ட இன்சைட் எட்ஜ்கள், அவுட் சைட் எட்ஜ்கள் ஒரு கேட்ச் வேறு அவருக்கு ஸ்லிப்பில் விடப்பட்டது. ஆனாலும் நின்று விட்டார் அவர்.
ஸ்டூவர்ட் பின்னி களமிறங்கி ரஹானேயுடன் இணைந்து 77 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் அமித் மிஸ்ரா, கரன் சர்மாவின் லெக்ஸ்பின் அவருக்கு பல சிரமங்களைக் கொடுத்தது. டேரன் சாமியை வாங்கினார்.
 
16வது ஓவரில் ரஹானே காலியானார். பிராட் ஹாட்ஜ் 8 பந்துகளில் 1 ரன் எடுத்து வீழ்ந்தார். அமித் மிஸ்ரா தனது T20 உலகக் கோப்பை பார்மை தொடர்ந்து பரமாரித்து வருகிறார், அவர்தான் ரஹானேயையும், ஹாட்ஜையும் வீழ்த்தினார்.
 
ஸ்டெய்ன் வந்தார் ரஜத் பாட்டியாவை காலி செய்தார். கடைசி ஓவர் 8 ரன்கள் தேவை. அப்போதுதான் ஜேம்ஸ் ஃபாக்னர் களமிறங்கினார். இரண்டு பவுண்டரிகளை விளாசி 3 பந்துகள் மீதமிருக்க வெற்றி தேடி தந்தார்.
 
ஐதராபாத் அணியில் அதிரடி மன்னர்களான தவான், வார்னர், ஏரோன் ஃபின்ச் ஆகியோர் இருந்தும் ரன் விகிதம் பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்தைத் தாண்டி எழும்ப முடியவில்லை. கே.எல். ராகுல் மற்றும் வேணுகோபால் ராவ் ஏதோ ஆடி ஸ்கோரை 133 ரன்களுக்கு இட்டுச் சென்றனர்.
 
இன்றைய ஆட்டம்:
 
மாலை 4 மணி: மும்பை - பெங்களூரு.
 
இரவு 8 மணி: கொல்கட்டா - டெல்லி 

வெப்துனியாவைப் படிக்கவும்