இந்தியா அபார வெற்றி, அஷ்வின் ஆட்ட நாயகன், தோனி உலக சாதனை

சனி, 30 ஆகஸ்ட் 2014 (22:34 IST)
இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்காம் நகரில் நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 2 - 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. 
 
இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள், மற்றும் இரண்டு 20 ஓவர் (டி20) போட்டி ஆகியவற்றில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது.
 
பின்னர் திட்டமிட்டபடி நடக்க இருந்த முதல் நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. மேலும் இவ்விரு அணிகளுக்கான 2 ஆவது ஒரு நாள் போட்டி 27 ஆகஸ்ட், 2014 அன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா, தோனி இருவரும் அரைசதங்களுடன் ஆறுதல் தந்தனர். மேலும் ரெய்னாவின் அசத்தலான சதம் கைகொடுக்க, இறுதியில் இந்திய அணி 133 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் 2014 ஆகஸ்டு 30 அன்று நாட்டிங்காம் நகரில் 3 ஆவது ஒரு நாள் போட்டி நடந்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
 
பூவா, தலையாவில் வென்ற இந்தியா, பந்து வீசத் தீர்மானித்தது. இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 227 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் அலஸ்டர் குக் 44 ஓட்டங்களும் ஹேல்ஸ், பட்லர் ஆகியோர் தலா 42 ஓட்டங்களும் சேர்த்தனர். இந்திய அணியில் அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ராயுடு, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
 
அடுத்து ஆடிய இந்திய அணி, 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் ரஹானே 45 ரன்களும் கோஹ்லி 40 ரன்களும் ரெய்னா 42 பந்துகளில் 42 ரன்களும் எடுக்க, ராயுடு 64 ரன்கள் குவித்து, கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 3 விக்கெட்டுகள் வீழ்த்திய அஷ்வின், ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார்.
 
இந்த 3ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் 2 பேரை ஸ்டெம்பிங் மூலம் தோனி ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டெம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்தார். தோனி, இதுவரை 131 முறை ஸ்டெம்பிங் செய்து, முதலிடம் பிடித்துள்ளார். இலங்கை வீரர் சங்ககாரா,  129 முறை ஸ்டெம்பிங் செய்து 2ஆவது இடத்தில் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்