பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணி அபார வெற்றி

வெள்ளி, 31 அக்டோபர் 2014 (09:30 IST)
இந்தியா ஏ மற்றும் இலங்கை அணிகள் மோதிய பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை திணறடித்தது நமது இந்திய ஏ அணி. இதில் ரோகித் ஷர்மா, மனிஷ் பாண்டே ஆகியோர் சதம் அடித்து அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
 
கேப்டன் மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
 
இதில் முதற்கட்டமாக இலங்கை-இந்திய ஏ அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் அக்,30 நேற்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற மேத்யூஸ், இந்திய ஏ அணியை பேட் செய்ய அழைத்தார். இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மாவும், உன்முக் சந்தும் இந்திய ஏ அணியின் இன்னிங்சை தொடங்கினர்.
 
இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் உன்முக் சந்த் 54 ரன்களில் கேட்ச் ஆனார். பின் அசத்தலான ஆட்டத்தை வெளிபடுத்திய ரோகித் ஷர்மா சதம் அடித்தார். 142 ரன்கள் எடுத்திருந்தபோது ரோகித் ஷர்மா வெளியேறினார்.மறுமுனையில் மனிஷ் பாண்டேவும் சதத்தை எட்டினார். இறுதியில் இந்திய ஏ அணி 382 ரன்கள் எடுத்தது.
 
பின்னர் விளையாடிய இலங்கை அணி முதல் ஓவரிலேயே பெரேராவின் விக்கெட்டை இழந்தது. இலங்கை அணியால் விக்கெட் இழப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில் இலங்கை அணியால் 9 விக்கெட்டு இழப்பிற்கு 294 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி அபார வெற்றி பெற்றது.இலங்கை அணியில் அதிகபட்சமாக தரங்கா 76 ரன்கள் எடுத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்