கிரிக்கெட்டில் இருந்தே விலகி விடலாம் என நினைத்தேன் - சச்சின் டெண்டுல்கர்

திங்கள், 3 நவம்பர் 2014 (13:36 IST)
'எனது தலைமையிலான இந்திய அணி படுமோசமாக தோற்ற சமயத்தில் கேப்டன் பதவியில் இருந்து மட்டுமல்ல, கிரிக்கெட் விளையாட்டில் இருந்தே விலகி விடலாம் என்று நினைத்தேன்’ என்று சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
 
வரும் நவம்பர் 6 ஆம் தேதி 'ப்ளேயிங் இட் மை வே' என்ற தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை வெளியிடவுள்ளார். இந்த புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டு பேசுகையில், "1997ம் ஆண்டு எனது தலைமையில் மேற்கிந்திய தீவுகள் சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் 2 டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 3வது டெஸ்டில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. 2வது இன்னிங்சில் 120 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தியது.
 
அதற்கு முந்தைய நாள் இரவு உள்ளூர் ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டபோது, அங்கிருந்த வெயிட்டர் ஒருவர் ‘நாளை எங்கள் அணி வெற்றி பெறும். அம்புரோஸ் பவுன்சராக போட்டு விக்கெட்டுகளை சாய்ப்பார்’என்றார். அதற்கு நான் ‘பிராங்க்ளின் ரோஸ் பவுன்சர் போட்டபோது சிக்சர் அடித்த மாதிரி, அம்புரோஸ் பந்தையும் விளாசுவேன். நாளை எனக்காக ஷாம்பெயின் பாட்டிலை தயாராக வைத்திருங்கள். நானே உங்களுக்கு ஊற்றிக் கொடுக்கிறேன்’ என்று ஜோக் அடித்தேன்.
 
ஆனால், மறுநாள் அந்த வெயிட்டர் சொன்னதுதான் நடந்தது. நாங்கள் 81 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவினோம். லஷ்மணன் மட்டுமே இரட்டை இலக்க ரன் எடுத்தார். நான் 4 ரன் தான் எடுத்தேன். மற்ற வீரர்களும் சொதப்பிவிட்டார்கள். யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.
 

 
அந்த தோல்வி என்னை வெகுவாக பாதித்தது. கேப்டன் பதவியில் இருந்து மட்டுமல்ல, கிரிக்கெட்டில் இருந்தே விலகி விடலாம் என நினைத்தேன். நெருக்கடியான அந்த சமயத்தில் எனது மனைவி அஞ்சலி தான், எனக்கு ஆதரவாக இருந்து தொடர்ந்து விளையாட ஊக்கமளித்தார்" என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்