இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: தனது 24 ஆவது சதத்தை அடித்தார் யூனிஸ் கான்

வியாழன், 7 ஆகஸ்ட் 2014 (10:21 IST)
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிய பாகிஸ்தானின் முகமது யூனிஸ் கான் சதம் அடித்து அசத்தினார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அபாரமாக ஆடிய பாகிஸ்தானின் யூனிஸ் கான் சதம் அடித்தார். இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆரம்பத்தில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் பிரசாத் சிறப்பாக விளையாடினார்.

மன்சூர் (3), செஷாத் (4) இருவரையும் சொற்ப ரன்னில் வெளியேற்றி பாகிஸ்தானை அவர் திணறடித்தார். அடுத்து வந்த அசார் அலி 30 ரன்களில் ஆட்டமிழந்த்ர்.

இந்நிலையில் 4 ஆவது விக்கெட்டுக்கு அனுபவ வீரர்களான யூனிஸ் கான், கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்த ஜோடி 100 ரன் சேர்த்த நிலையில் மிஸ்பா உல் ஹக் (31) ஹெராத் சுழலில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய யூனிஸ் கான் டெஸ்ட் போட்டியில் தனது 24 சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்துள்ள இன்சமாம் உல் ஹக்கை (25 சதம்) அவர் நெருங்கி உள்ளார்.

அவருடன் இணைந்து ஆடிய ஆசாத் ஷபிக் நல்ல ஒத்துழைப்பு தர முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்தது. யூனிஸ்கான் 133, ஷபிக் 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்