பெங்களூரை பதம் பார்த்த டெல்லி: 48 பந்தில் சதம் விளாசிய குவிண்டன் டி காக்!

திங்கள், 18 ஏப்ரல் 2016 (11:10 IST)
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற பெங்களூரு-டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் குவிண்டன் டி காக்கின் அபார சதத்தால் டெல்லி அணி வெற்றி பெற்றது.


 
 
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறாங்கிய பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர் கெயில் டக் அவுட் ஆனாலும் தொடர்ந்து களம் இறங்கிய கோலி, டிவில்லியர்ஸ், வாட்சன் ஆகியோரின் பொறுப்பான அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி அபாரமாக 191 ரன்கள் குவித்தது. பின் வரிசையில் களமிறங்கிய வீரர்களும் பொறுப்பாக ஆடியிருந்தால் 200 ரன்களை தாண்டி இருக்கும் பெங்களூரு அணி.
 
192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கியது டெல்லி அணி. தொடக்க ஆட்டக்காரர் ஷ்ரெயாஸ் ஐயர் ரன் எதுவும் எடுக்காமல் நடையை கட்டினாலும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குவிண்டன் டி காக் ருத்ர தாண்டவம் ஆடினார். வெறும் 48 பந்துகளில் 100 ரன்னை கடந்த குவிண்டன் டி காக் 15 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 51 பந்துகளில் 108 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
 
கருன் நாயர் தன் பங்குக்கு 42 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார். 19.1 ஓவரில் டெல்லி அணி அபார இலக்கான 192 ரன்னை 3 விக்கெட்டை இழந்து எட்டியது. அபாரமாக விளையாடி 51 பந்துகளில் 108 ரன் குவித்து அணியின் வெற்றிக்கு உதவிய குவிண்டன் டி காக் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்