16 வருடங்களுக்கு பிறகு வங்கதேசத்திடம் பணிந்தது பாகிஸ்தான்

சனி, 18 ஏப்ரல் 2015 (16:21 IST)
நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், வங்கதேச அணி 79 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 
 

 
பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி நேற்று அரங்கேறியது. இதில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்கத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வங்கதேசம் பின் சுதாரித்து கொண்டது.
 
இதில் இக்பால் - முஷ்பிகுர் ரம் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சை நேர்த்தியாக கையாண்டனர். தொடர்ந்து அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்திய இக்பால் தனது 5 வது சதத்தை கடந்து 132 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் முஷ்பிகுர் ரம்மும் தன் பங்கிற்கு சதத்தை கடந்து 106 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தது.
 
இதைத்தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் வீரர்கள் பெரிதாக யாரும் சோபிக்கவில்லை. அதிகபட்சமாக அசார் அலி 72 ரன்கள், ரிஸ்வான் 67 ரன்கள் எடுத்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 250 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் வங்கதேச அணி 79 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

வெப்துனியாவைப் படிக்கவும்