விஷ்ணு அவதார சர்ச்சை :நேரில் ஆஜராக கேப்டன் தோனிக்கு ஆந்திர நீதிமன்றம் சம்மன்

புதன், 7 அக்டோபர் 2015 (07:16 IST)
இந்துக்கடவுள் விஷ்ணு அவதாரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சித்தரிக்கப்பட்ட வழக்கில், நேரில் ஆஜராகுமாறு தோனிக்கு ஆந்திர நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.


 
 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து வருகிறார். இதன் மூலம் அவருக்கு பல கோடிகள் வருமானமாக கிடைக்கிறது.
 
இதனை விமர்சிக்கும் விதமாக மகேந்திர சிங் தோனியை இந்துக் கடவுள் விஷ்ணுவைப் போல சித்தரித்து  ஒரு பத்திரிகை கடந்த ஆண்டு கேலிச்சித்திரத்தை வெளியிட்டது.
 
அந்தக் கேலிச்சித்திரத்தில் தோனிக்கு எட்டு கைகள் இருப்பது போன்றும் ,ஒவ்வொரு கைகளிலும் ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை வைத்திருப்பது போன்றும்  அந்த புகைப்படம் இருக்கும்.
 
இந்தப் புகைப்படம் வெளியானதும் ஏராளமான இந்து அமைப்புகள் தோனிக்கு எதிராக போர்க்கொடி தூக்கின. இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக கூறி அவருக்கு எதிராக பல்வேறு நகரங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன.
 
இந்நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த விஷ்வ இந்து பிரிவுத்தலைவர் ஷியாம் சுந்தர் தோனிக்கு எதிராக அனந்தபூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இதன் மீதான விசாரணைக்கு தோனி ஆஜராரகவில்லை. எனவே நவம்பர் 7 ஆம் தேதி தோனி நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று ஆந்திர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்