T20 உலக கோப்பை: இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோல்வி

செவ்வாய், 18 மார்ச் 2014 (13:10 IST)
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 5 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
FILE

வங்கதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியையொட்டி மிர்புரில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இலங்கை - இந்தியா அணிகள் பலப்பரீட்ச்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மஹேலா ஜெயவர்த்தனே 30 ரன்னும், கேப்டன் தினேஷ் சன்டிமால் 29 ரன்னும், குசல் பெரேரா 21 ரன்னும் எடுத்தனர். திசரா பெரேரா 18 ரன்னுடனும், குலசேகரா 21 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், வருண்ஆரோன், அமித் மிஸ்ரா, சுரேஷ்ரெய்னா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் பேட்டிங் சொதப்பல் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் 2 ரன்னிலும், ரோகித் ஷர்மா 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
FILE

சுரேஷ் ரெய்னா (41 ரன்கள்), யுவராஜ்சிங் (33 ரன்கள்) ஆகியோர் மட்டுமே ஓரளவு நிலைத்து நின்று ஆடினார்கள். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறினார்கள்.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. மலிங்கா வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் ஸ்டூவர்ட் பின்னி ஒரு ரன் எடுத்தார். 2-வது பந்தில் அஸ்வின் பவுண்டரி விரட்டினார். 3-வது பந்தில் ஸ்டூவர்ட் பின்னி ரன்-அவுட் ஆனார். 4-வது பந்தில் புவனேஷ்வர்குமார் ஒரு ரன் எடுத்தார். 5-வது பந்தில் அஸ்வின் ஆட்டம் இழந்தார். கடைசி பந்தில் அமித்மிஸ்ரா போல்டு ஆனார்.

20 ஓவர்களில் இந்திய அணி 148 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் மலிங்கா 4 விக்கெட்டும், குலசேகரா 2 விக்கெட்டும், செனநாயகே, மென்டிஸ், ஹெராத் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்