700 விக்கெட்டுகள்! முரளிதரன் சாதனை!

Webdunia

சனி, 14 ஜூலை 2007 (19:21 IST)
டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பந்து வீச்சாளர் என்ற பெருமையை இலங்கையின் சுழற்பந்து வீச்சாளார் முத்தையா முரளிதரன் பெற்றுள்ளார்!

வங்கதேச அணிக்கு எதிராக கண்டியில் இன்று நடந்து முடிந்த 3வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் கடைசி வீரரான சையது ராசலை முரளிதரன் வீழ்த்தினார். இது அவரது 700 டெஸ்ட் விக்கெட்டாகும்.

வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முரளிதரன் 28 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 500 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது. சங்ககாரா 228 ரன்களும், மஹிலா ஜெயவர்தனே 165 ரன்களும் எடுத்தனர்.

இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 370 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய வங்கதேச அணி 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. துவக்க ஆட்டக்காரா ·பீஸ் மட்டும் 64 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி இன்னிங்ஸ் 194 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.

முத்தையா முரளிதரன் 21 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்து மீண்டும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இத்துடன் சேர்த்து இந்த டெஸ்ட் போட்டியில் மட்டும் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய முரளிதரன் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனகாவும் தோவு செய்யப்பட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்ட்ரேலிய சுழற்பந்து வீச்சாளார் ஷேன் வார்ன் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தத் தொடரில் மட்டும் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முரளிதரன், தனது இலக்கு 1000 டெஸ்ட் விக்கெட்டுகள் என்றும், 2011ல் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியிலும் விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்