ஆஸி. ரன் குவிப்பு: இந்திய அணிக்கு 349 ரன் இலக்கு

புதன், 20 ஜனவரி 2016 (12:39 IST)
இந்தியா ஆஸ்திரேலியா இடையே கான்பெர்ராவில் நடக்கும் நான்காவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 348 ரன் குவித்து இந்திய அணிக்கு 349 ரன் இலக்காக நிர்ணயித்துள்ளது.


 
 
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்ட ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் ஃபின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 187 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு வலுவான அடித்தளமிட்டனர்.
 
வார்னர் 93 ரன்னிலும் ஃபின்ச் 107 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய மார்ஷ் 33 ரன்னும் கேப்டன் ஸ்மித் 29 பந்துகளில் 51 ரன்னும் குவித்தனர். பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் கடைசி நேரத்தில் 20 பந்துகளுக்கு 41 ரன் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
 
50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணி ஆடவுள்ளது. முதல் மூன்று போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்த இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக ஆடினால் இந்த இலக்கை நெருங்க முடியும்.
 
இந்திய அணியின் பேட்டிங் முழுவதும் ரோகித் சர்மா, விராட் கோஹ்லி மற்றும் ரஹானே ஆகியோரையே நம்பியுள்ளது. மற்ற வீரர்களின் பேட்டிங் மிகவும் கவலைக்குறியதாகவே உள்ளது.
 
5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலையுடன், தொடரையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வென்று தனது முதல் வெற்றியை இந்தியா பெறுமா? என்பது சந்தேகமே.

வெப்துனியாவைப் படிக்கவும்