3 ஆவது ஒரு நாள் போட்டி: வெற்றிக் கணக்கைத் தொடருமா இந்தியா

சனி, 30 ஆகஸ்ட் 2014 (10:16 IST)
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3 ஆவது ஒரு நாள் போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள நாட்டிங்காம் நகரில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள், மற்றும் இரண்டு 20 ஓவர் (டி20) போட்டி ஆகியவற்றில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்தது.

பின்னர் திட்டமிட்டபடி நடக்க இருந்த முதல் நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. மேலும் இவ்விருஅணிகளுக்கான 2 ஆவது ஒரு நாள் போட்டி 27 ஆகஸ்ட், 2014 அன்று நடை பெற்றது.

இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா, தோனி இருவரும் அரைசதங்களுடன் ஆறுதல் தந்தனர். மேலும் ரெய்னாவின் அசத்தலான சதம் கைகொடுக்க, இறுதியில் இந்திய அணி 133 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் இன்று நாட்டிங்காம் நகரில் 3 ஆவது ஒரு நாள் போட்டி நடக்கவுள்ளது. இதில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ரோகித் ஷர்மாவிற்கு பதிலாக முரளி விஜய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியைப் பொறுத்தவரை ஷகீர் தவான், கோலி ஆகியோர் தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மிடில் ஆடரை எடுத்துக் கொண்டால் ரெய்னா, தோனி இருவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை இன்றும் தொடர வேண்டும்.

பந்து வீச்சாளர்கள் ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் ஆகிய அனைவரும், இன்றும் திறம்பட செயல்பட்டால் இங்கிலாந்து அணியை எளிதில் வென்றுவிடலாம்.

அதேசமயம் கடந்த முறை அடைந்த தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்க காத்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்