2வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 90 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான்

ஞாயிறு, 12 ஜூலை 2009 (13:47 IST)
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று துவங்கியது. இதில் பூவா-தலையா வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.

துவக்க வீரர்களாக குர்ராம் மன்சூர், பாவாத் ஆலம் களமிறங்கினர். இதில் மன்சூர் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய அணித்தலைவர் யூனிஸ் கான் ரன் எதுவும் எடுக்காமல் நடையைக் கட்டினார்.

இதையடுத்து ஆலம் உடன் இணைந்த முகமது யூசுஃப், இலங்கை பந்துவீச்சாளர்களை ஓரளவு சமாளித்தார். எனினும் இந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அணியின் ரன் எண்ணிக்கை 17 ஆக இருந்த போது முகமது யூசுஃப் (8 ரன்கள்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிஸ்பா ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

சோயப் மாலிக் உடன் இணைந்த ஆலம் சிறிது நேரம் மட்டுமே நிலைத்தார். அவர் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கம்ரான் அக்மல், அப்துர் ரவுஃப், உமர் குல், முகமது ஆமிர், சயீத் அஜ்மல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த அணி 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சோயப் மாலிக் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கைத் தரப்பில் குலசேகரா 4 விக்கெட், மெண்டிஸ் 3 விக்கெட், துஷாரா 2 விக்கெட், மேத்யூஸ் ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சை துவக்கியுள்ளது. வர்னபுரா, பரணவிதனா இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்