ஹர்பஜன் தடை நீக்கப்படாவிட்டால் ஒரு நாள் தொடர் புறக்கணிப்பு?

புதன், 9 ஜனவரி 2008 (14:41 IST)
ஹர்பஜன் சிங்கிற்கு விதித்துள்ள 3 டெஸ்ட் போட்டிகள் தடையை முழுதும் நீக்கி, நிறவெறிக் குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்படாவிட்டால், ஆஸ்ட்ரேலியா, இலங்கை, இந்தியா பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியா விளையாடுவது சந்தேகம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிட்னி கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்ட்ரேலிய வீரர் ஆன்ரூ சைமண்ட்சை நிறவெறி வசை செய்தார் ஹர்பஜன்சிங் என்ற குற்றச்சாட்டு அபாண்டமானது, அவர் அதுபோன்ற வசையை செய்ததற்கன ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.

இதனால் இந்த நிறவெறிக் குற்றச்சாட்டிலிருந்து ஹர்பஜன் முழுவதும் விடுவிக்கப்படவில்லையெனில் முத்தரப்பு ஒரு நாள் தொடரை துறப்பதும் தங்களிடம் உள்ள ஒரு யோசனை என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாயன்று இந்த நெருக்கடி குறித்து விவாதித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் "ஆஸ்ட்ரேலிய பயணம் இப்போதைக்கு தொடரலாம்" என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது கவனத்திற்குரியது.

மேலும் இனிவரும் போட்டிகளையும், ஹர்பஜன் விவகாரத்தில் இனிமேல் எடுக்கப்படும் முடிவுகளையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூர்ந்து கவனிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இதனால் நியாயம் கிடைக்கும் வரை இந்திய கிரிக்கெட் வாரியம் போராடும் என்றே தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்