யூனுஸ்கான் - பயிற்சியாளர் கருத்து வேறுபாடு

திங்கள், 8 ஜூன் 2009 (18:56 IST)
ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வி தழுவியதையடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன், பயிற்சியாளர் இன்டிகாப் ஆலம் ஆகியோரிடையே உட்பூசல் ஏற்பட்டுள்ளதாக பாக். ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்துப் பேசுவதில்லை என்று பாகிஸ்தான் தரப்பு ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளது.

அடுத்து நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அந்த அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தால்தான் சூப்பர்- 8 சுற்றுக்கு தகுதி பெறும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

முதல் போட்டிக்கு முன்னர் அணி வீரர்கள் தேர்வு, மற்றும் ஆட்ட உத்திகள் குறித்து யூனுஸ் கானும், இன்டிகாப் ஆலமும் வேறுபட்ட இரண்டு அறிக்கைகள் அளித்தது இந்த கருத்து வேறுபாடு இருப்பதை பறை சாட்டியதாக அந்த பத்திரிக்கை செய்தி கூறுகிறது.

மேலும் இன்டிகாப் ஆலமின் பயிற்சி முறை காலங்கடந்ததாக உள்ளது என்று யூனுஸ் கான் கருதுவதாக அணி வீரர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிக்கை செய்தி குறிப்பிட்டுள்ளது.

பயிற்சியாளர் இன்டிகாப் ஆலம் மட்டுமல்லாது உதவிப் பயிற்சியாளர் அகிப் ஜாவேதிடமும் யூனுஸ் கான் முகம் கொடுத்து பேசுவதில்லை என்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்