மோசமான நடுவர் தீர்ப்புகள்! கூடுதல் ஆக்ரோஷம்- இந்தியா வேதனை தோல்வி!

ஞாயிறு, 9 பிப்ரவரி 2014 (12:12 IST)
407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இன்று 87/1 என்று களமிறங்கிய இந்தியா 366 ரன்கள் வரை வந்து நியூசிலாந்தை அச்சுறுத்தியது. ஆனால் கடைசியில் 366 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 40 ரன்களில் ஒரு மகத்தான வெற்றி வாய்ப்பை போராடி நழுவ விட்டது. நியூசீலாந்து டெஸ்ட் தொடரில் 1- 0 என்று முன்னிலை. தோனியின் அயல்நாட்டு கறுப்ப்புப் புத்தகத்தில் மேலும் ஒரு பக்கம் சேர்ந்துள்ளது.
FILE

முதலில் முரளி விஜய்க்கு பேடில் பட்டு சென்ற பந்தை கேட்ச் என்று தீர்ப்பளித்தார் நடுவர், இன்று மிக முக்கியக் கட்டத்தில் அஜின்கியா ரஹானேயிற்கு பந்து மட்டையில் நன்றாக பட்டு பேடில் படுகிறது நடுவர் எல்.பி. என்று கையை உயர்க்த்தினார் அது நாட் அவுட். இது தோல்விக்கு ஒரு முக்கியக் காரணமாக ஆகிவிட்டது.

மேலும் கடைசியில் தோனியை வீழ்த்திய பந்தும் நோ-பால் என்பது போலவே தெரிந்தது. சந்தேகமாக இருக்கும்போது சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மனுக்குச் சாதகமாகவே அளிக்கவேண்டும், ஏனெனில் ஒருமுறை அவுட் என்றால் கதை முடிந்தது. ஆனால் பவுலருக்கு அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்த வாய்ப்பிருக்கிறது. நடுவர் தீர்ப்பும் இன்றைய தோல்விக்கு ஒரு காரணம்.

இன்று காலை வந்தவுடன் புஜாரா 2 ரன்களில் சவுத்தீயின் அபாரமான ரைசிங் அவுட் ஸ்விங்கருக்கு வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
FILE

பிறகு கோலி, தவான் இணைந்தனர். இருவரும் இணைந்து ஆட்டத்தை நியூசீலாந்திடமிருந்து பிடுங்கிச் சென்றனர். இருவரும் சேர்ந்து 126 ரன்களைச் சேர்த்தனர். முதல் ஒரு மணிநேரத்தில் வேக்னர், சவுதீ அபாரமாக வீசியதால் ரன் வர வில்லை. 14 ஓவர்களில் 34 ரன்களுக்கு இந்தியா ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.

அதன் பிறகு சவுதீ நிறுத்தப்பட்டார். உடனே கோலி வேக்னரை அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். ஒரு கவர் டிரைவ் பிறகு ஒரு புல் ஷாட். பிறகு சில பல கவர் டிரைவ், ஸ்பின்னர் சோதியை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள், வில்லியம்சனை ஓரிரு பவுண்டரி என்று கோலி 80 பந்துகளில் 50 ரன்களை எட்டினார்.
FILE

102 பந்துகளில் 67 ரன்கள் எடுத்த கோலி முதல் தவறை செய்தார். கூடுதல் ஆக்ரோஷம்தான் அவரது வீழ்ச்சிக்குக் காரணம், வேக்னர் வீசிய அந்தப் பந்து ஷாட் பிட்ச் ஆஃப் ஸ்டம்பிற்கு மிகவும் வெளியே சென்றது ஒன்று அதை ஆஃப் ஸைடில் ஆடியிருக்கவேண்ட்ம், அல்லது விட்டிருக்கவேண்டும் கோலி என்ன நினைத்தாரோ அதனை புல் ஆட முயன்றார் பந்து மட்டையின் அடி விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது. இது ஒரு முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது.
FILE

ஒரு முனையில் தவான் அருமையான நிதானம் காட்டி ஆடிவந்தா. அவரும் அவ்வப்போது லூஸ் பந்துகளை பவுண்டரி விளாசினார். 90 ரன்களை எட்டிய பிறகு சோதி வீசிய ஓவரில் மேலேறி வந்து ஒரு சிக்சர் அடித்தார். பிறகு அடுத்த பந்து பாயிண்டில் ஒரு கட் பவுண்டரி தவான் சதம் எடுத்தார். தவான் 12 பவுண்டரி ஒரு சிக்சருடன் 211 பந்துகளை பொறுமையுடன் எதிர்கொண்டு 115 ரன்கள் எடுத்தார். அப்போதுதான் வாக்னர் வீசிய பந்து ஒன்று தவான் மேல் எகிற அவர் எம்பிக்குதித்தார் பந்து கையுறையைத் தொட்டுச் சென்று கேட்ச் ஆனது.

இந்தியா 248/4 என்று இருந்தது. ரஹானே 21 பந்துகளில் 3 பவுண்டரி அடித்து ஆக்ரோஷமாகவே காணப்பட்டார். 18 ரன்களில் இருந்தபோதுதான் புதிய பந்து எடுக்கப்பட்டு முதல் பந்தை போல்ட் வீச அது இன்ஸ்விங்கர், மட்டையில் பட்டு பேடில் பட்டது. நடுவர் அவுட் என்றார். திகைத்தர் ரஹானே.
FILE

268/5 என்ற நிலையில் ரோகித் சர்மா மட்டுமே இருந்தார். அவர் 19 ரன்களுடன் இருந்தார் தேநீர் இடைவேளை வந்தது. பிறகு வந்து சவுதீ வீசிய முதல் பந்தை தேவையில்லாமல் எட்ஜ் செய்தார். முன்னங்காலை போட்டு கமிட் ஆகிவிட்டார் பந்து சற்றே எழும்பவே பேட்டை விலக்க முடியாமல் எட்ஜ் ஆனது. 270/6 என்ற நிலையில் தோனியுடன், ஜடேஜா சேர்ந்தார்.

திடீரென ஒரு ஆக்ரோஷ மனோநிலை தோன்றியது. ஜடேஜா கன்னாபின்னாவென்று அடிக்கத் தொடங்கினார். தோனி மேலேறி வந்து சவுதீயை ஒரு வாங்கு வாங்கினார். ஆட்டம் களை கட்டத்தொடங்கியது. ஜடேஜா நேராக ஒரு பவுண்டரி ஒரு கட் ஷாட். பிறகு பவுன்சரை ஒரு டென்னிஸ் ஷாட் அடித்தாரே பார்க்கலாம் பந்து நேராக சிக்ஸ்.
FILE

திடீரென இந்த எதிர்தாக்குதலை நியூசீலாந்து எதிர்பார்க்கவில்லை. தோனியும், ஜடேஜாவும் 34 பந்துகளில் 54 ரன்களைச் சேர்த்தனர். நியூசீலாந்துக்கு கிலி பிடித்தது.

மீண்டும் புதிய பந்தை அடித்தாகிவிட்டது. பீல்டிங்கும் தள்ளி வைக்கப்பட்டது. அப்போது பழைய நிலைக்குத் திரும்பி செட்டில் ஆகி ஆடியிருக்கவேண்டும், ஆனால் ஜடேஜா மீண்டும் மேலேறி வந்து போல்ட் பந்தை வெளுக்க நினைத்தார் பந்து மிட் ஆனில் கேட்ச் ஆனது. ஜடேஜா 21 பந்துகளில் 4பவுண்டரி 1 சிக்சர் என்று ஒரு மினி டுவெண்டி டுவெண்டி காண்பித்துவிட்டுப் போனார். ரோகித் சர்மாவும் இந்த முறையை கடைபிடித்திருக்கவேண்டும், நின்று கொண்டு அறுத்துக் கொண்டிருந்தால் ரன்கள் எப்படி வரும்?

ஜடேஜா அவுட் ஆன பிறகு ஜாகீர் கான் ஆக்ரோஷம் காட்டினார். அவர் 1 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து வேக்னர் பந்தில் பவுல்டு ஆனார். 349/8 என்ற நிலையில் தோனி 30 ரன்னில் தனித்து விடப்பட்டார். அவரும் கடைசியில் 39 ரன்களில் பவுல்டு ஆனார். ஆனால் அது நோபால் என்றே தெரிகிறது. இந்தியா கடைசியில் 366 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நடுவர் தீர்ப்புகள், ஓவர் ஆக்ரோஷத்தினால் ஒரு வரலாற்று வெற்றி வாய்ப்பை இந்தியா தவற விட்டது. ஆட்ட நாயகன் பிரெண்டன் மெக்கல்லம்.

வெப்துனியாவைப் படிக்கவும்