மேற்கிந்திய அணியை வீழ்த்தியது வங்கதேசம்

புதன், 12 அக்டோபர் 2011 (11:58 IST)
FILE
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரேயொரு இருபது ஓவர் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது வங்கதேசம்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய வங்கதேசம் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பரத்தும், சிம்மன்சும் ஆமை வேகத்தில் ஆடினர். பரத் 20 பந்துகளில் 15 ரன்களும், சிம்மன்ஸ் 24 பந்துகளில் 23 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

பின்னர் வந்தவர்களில் சாமுவேல்ஸ் நீங்கலாக அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். தனி நபராகப் போராடிய சாமுவேல்ஸ் 42 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சேர்த்து 7-வது விக்கெட்டாக வெளியேறினார். இறுதியில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது.

வங்கதேசம் தரப்பில் ரசாக், ஷபியுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

வங்கதேசம் வெற்றி: பின்னர் ஆடிய வங்கதேச அணியில் இக்பால் 11, இம்ருல் கெய்ஸ் 22, அஷ்ரபுல் 24 ரன்கள் எடுத்து வெளியேறினர். பின்வரிசையில் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் அதிரடியாக விளையாடினார். கடைசி 2 பந்துகளில் வங்கதேசத்தின் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டன.

20-வது ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட முஷ்பிகுர் சிக்ஸர் அடிக்க, வங்கதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. 26 பந்துகளைச் சந்தித்த முஷ்பிகுர் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ராம்பால், சாமுவேல்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முஷ்பிகுர் ரஹிம் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்