மர்லான் சாமியெல்ஸ் மீது "த்ரோ" புகார்

திங்கள், 14 ஜனவரி 2008 (16:42 IST)
டர்பன் நகரில் நடைபெற்ற 3வது இறுதி டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய வீரர் மர்லான் சாமியெல்ஸ் பவுலிங் செய்வதற்கு பதிலாக பந்தை விட்டு எறிந்தார் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் நடுவர்களாக பணியாற்றிய சைமன் டாஃபல், அலீம் தார், 3வது நடுவர் ப்ரையன் ஜெர்லிங் மற்றும் ஆட்ட நடுவர் ரோஷான் மஹானாமா ஆகியோர் சாமியேல்ஸ் பந்து வீச்சு பற்றி கூறுகையில் அவர் வீசும் வேகமான பந்து விட்டு எறிவது போல் தெரிகிறது என்று சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

தற்போது மர்லான் சாமியெல்ஸ் முதலில் ஐசிசி குழுவின் உறுப்பினர் ஒருவரின் மேற்பார்வையில் பந்து வீசி பரிசோதனை செய்யப்படுவார். அப்போது வேகமாக அவர் வீசும் அந்த குறிப்பிட்ட பந்து விட்டு எறிவதாக இருந்தால் அந்த பந்தை வீச சாமியெல்சிற்கு தடை விதிக்கப்படும்.

அதன் பிறகும் அவர் பந்து வீச்சு மீது புகார் எழுந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச அவருக்கு தடை விதிக்கப்படலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்