பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி அபாரம்-தோனி

பாகிஸ்தானுக்கு எதிரான 20- 20 பயிற்சி கிரிக்கெட் போட்டியில் நேற்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி சிறப்பானது என்று கூறிய தோனி, இது போன்ற ஆட்டத்தை மீண்டும் அப்படியே மீண்டும் விளையாடுவது கடினம் என்று கூறியுள்ளார்.

பெரிய அளவிலான ரசிகர்கள் எண்ணிக்கைக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 158 ரன்களை இந்திய வீரர்களான ரோஹித் ஷர்மாவும், கௌதம் கம்பீரும் சிக்கலின்றி எடுத்து வெற்றி பெற வைத்தனர்.

ரோஹித் ஷர்மா தொடர்ந்து இத்தகைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் என்றாலும் அணியில் அவரது நிரந்தர இடம் குறித்து தோனி எந்த வித உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.

சேவாக் காயமடைந்திருக்கிறார் என்றாலும் அது பற்றி தன்னால் எதுவும் ஆரூடம் கூற முடியாது என்று கூறிய தோனி காயம் என்றால் அது காயம்தான், அது பற்றி நாம் ஒன்றும் கூறுவதற்கில்லை என்றார்.

ஆனால் ஜாகீர் கான் காயம் குறித்து தெளிவாகக் குறிப்பிட்ட தோனி அவர் வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறியுள்ளார்.

"ஜாகீர் கான் பந்து வீசி வருகிறார், அறிகுறிகள் உற்சாகமாக உள்ளன, ஆனால் இந்த தருணத்தில் பரிசோதனை செய்ய விரும்பவில்லை" என்றார் தோனி.

வெப்துனியாவைப் படிக்கவும்