பயிற்சி ஆட்டத்தில் மைக் ஹசி அரைசதம்: ஆஸி.-191/4

வெள்ளி, 3 அக்டோபர் 2008 (17:45 IST)
இந்திய வாரியத் தலைவர் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்ட்ரேலிய வீரர் மைக் ஹசி அரைசதம் அடித்துள்ளார். போட்டியின் 2ம் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்ட்ரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்துள்ளது.

PTI PhotoFILE
ஹைதராபாத்தில் நேற்று துவங்கிய இப்போட்டியில் பூவா, தலையா வென்ற இந்திய வாரியத் தலைவர் அணி முதல் இன்னிங்சில் 455 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நடுக்கள வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவரும் தலா 105 ரன்கள் குவித்தனர்.

இதையடுத்து போட்டியின் 2ம் நாளான இன்று முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்ட்ரேலிய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்திருந்தது. இதில் மைக் ஹசி 54 ரன்களுடனும், ஹட்டின் 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

முன்னதாக இன்னிங்சை தொடங்கிய ஆஸ்ட்ரேலிய துவக்க வீரர்கள் ஹைடன் 20 ரன்களும், கேடிச் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் 41 ரன்களும், மைக்கேல் கிளார்க் 18 ரன்களும் எடுத்தனர்.

இந்திய பந்துவீச்சாளர்களில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளும், பத்தான், ஓஜா தலா ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.