நியூஸீலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறத் தவறியவர்கள்

ஞாயிறு, 15 பிப்ரவரி 2009 (13:41 IST)
நியூஸீலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் தங்களது சிறப்பான செயல்பாடுகள் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் இடம் பெற்றிருந்தாலும், அணியில் இடம்பெற முடியாது நிலையில் 4 வீரர்கள் உள்ளனர்.

பத்ரிநாத்: தமிழக வீரர் எஸ்.பத்ரிநாத் அணியில் இடம்பெறாதது தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமல்ல அனைத்து தரப்பினரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து ரன்களைக் குவித்துள்ள இவரது ரன் சராசரி 57.38.

தற்போது 28 வயதாகும் பத்ரிநாத் சிறப்பான நடுக்கள ஆட்டக்காரர் என்றாலும், தற்போதுள்ள டெஸ்ட் அணியில் திராவிட், லக்ஷ்மண், யுவராஜ் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு தேர்வாளர்கள்தான் காரணம் எனக் கூற முடியாது.

பார்தீவ் படேல்: விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மென் ஆன இவர் கடந்தாண்டு இலங்கைக்கு எதிராக அந்நாட்டில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தற்போதைய குஜராத் அணியின் தலைவரான இவர், துலிப் கோப்பை இறுதிப்போட்டியில் 131 ரன்கள் குவித்துள்ளார்.

எனினும், இந்திய அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக் ஆகிய 2 விக்கெட்-கீப்பர்கள் அணியில் இடம்பெற்றுள்ளதால், இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை.

அஜின்கியா ரானே: மும்பை அணியின் சிறந்த பேட்ஸ்மென் எனப் பெயர் பெற்றுள்ள இவர், மும்பை அணி 38வது ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றுவதற்கு பேருதவியாக இருந்துள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் ரானே இடம்பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என முன்னாள் அணித்தேர்வாளர் திலிப் வெங்சர்க்கர் கருத்துத் தெரிவித்திருந்தாலும், தற்போது அணியின் நடுக்கள ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

சிதேஸ்வர் புஜாரா: சௌராஸ்டிரா அணியில் விளையாடி வரும் இவர், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்தாலும், அதிர்ஷ்ட தேவதை இவருக்கு துணை புரியவில்லை என்றுதான் கூற வேண்டும்.

உள்ளூர் போட்டியில் முச்சதம் (300 ரன்) குவித்துள்ள இவருக்கு வயது 21 வயதுதான் ஆகிறது என்பதால், எதிர்காலத்தில் மூத்த வீரர்கள் ஓய்வு பெறும் போது இவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்