தோனி ஆட்ட நாயகன்! இந்தியா அபார வெற்றி

சனி, 4 ஜூலை 2009 (11:16 IST)
செயின்ட் லூசியாவில் நேற்று நடைபெற்ற இந்திய-மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி மழை காரணமாக குறைந்த ஓவர் போட்டியானது. இதில் மேற்கிந்திய அணி 27 ஓவர்களில் 186/7 என்ற ஸ்கோரை எட்டியது. இந்திய அணிக்கு 22 ஓவர்களில் 159 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தோனியின் அபார ஆட்டத்தினால் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்படும்போது எந்த அணி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்ற நிலைதான் இருந்தது. ஆனால் டெய்லர் வீசிய அந்த கடசி ஓவரின் 2-வது பந்தை தோனி மிட் விக்கெட்டிற்கு மேல் அசாத்தியமான சிக்சர் ஒன்றை அடிக்க இலக்கு எளிதாக முடிந்தது.

27 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டம் மீண்டும் மழையால் இடையூறு ஏற்பட இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 22 ஓவர்களில் 159 ரன்களாக குறைக்கப்பட்டது.

கார்த்திக்கும் கம்பீரும் 12 ஓவர்களில் 84 ரன்களை சேர்த்தனர். இதில் கம்பீர் 2 பவுண்டாரிகள் மட்டுமே அடித்து 38 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். கார்த்திக் அபாரமான முறையில் விளையாடி 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 47 ரன்களை விளாசினார்.

ஆனால் கம்பீரும், யுவ்ராஜ் சிங்கும் (2 ரன்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா 17 ஆவது ஓவரில் 117/3 என்று சற்றே தடுமாற்றம் அடைந்தது. அதன் பிறகு தோனி, ரோஹித் ஷர்மா (11) ஆகியோர் ஸ்கோரை 23 பந்துகளில் 31 ரன்களை எடுத்தனர். 148 ரன்களாக இருந்த போது ரோஹித் ஷர்மாவும் ஆட்டமிழந்தார்.

ஆனால் தோனி கடைசி வரை நின்று ஆடி ஒன்று இரண்டு என்று ரன்களை சேர்த்த போதும் 2 பவுண்டரி மற்றும் கடைசி ஓவரில் அடித்த மிக முக்கிய சிக்சர் ஆகியவற்றுடன் 34 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முன்னதாக பூவா தலையா வென்ற இந்தியா முதலில் மேற்கிந்திய அணியை பேட் செய்ய அழைத்தது.

கிறிஸ் கெய்ல் வழக்க்ம் போல் ஏதோ ரயிலை பிடிக்கவேண்டும் என்பது போல் விளாசலில் இறங்கினார். பின்னங்காலை சற்றே இடது புறமக நகர்த்தி நேராக நின்று கொண்டு ஆன் சைடிலோ, ஆஃப் சைடிலோ பந்துகளை விளாசி இஷாந்திற்கும், நெஹ்ராவிற்கும் கடும் நெருக்கடிகளை கொடுத்தார். 14 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த அவர்

நெஹ்ரா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு சர்வாண், மார்டன் இணைந்தனர். இதில் சர்வாண் ஒன்று, இரண்டு என்று ரன்களை சேர்க்கத் தொடங்கினார். அதன் பிறகு 5 பவுண்டரிகளையும் ஒரு சிக்சரையும் எடுத்து 59 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இடையில் டேரன் பிராவோ, லாராவை நினைவூட்டும் 3 பவுண்டரிகளுடன் 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். தினேஷ் ராம்தின் இறங்கி ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 6 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க மேற்கிந்திய அணி 27 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில் பந்து வீச்சு மீண்டும் படு மோசமாக இருந்தது. கெய்லை வீழ்த்த எந்த வித திட்டமும் இல்லாமல் அவருக்கு வாகாக வீசுகின்றனர் இஷாந்த், ஆர்.பி.சிங், நெக்ரா ஆகிய மூவரும்.

ஆனால் நெஹ்ரா 5 ஓவர்களில் சிக்கனமான 21 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பத்தான் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

தினேஷ் கார்த்திக், கம்பீர் ஆகியோர் கொடுத்த அபார அடித்தளத்தின் மீது தோனியின் கேப்டன் இன்னிங்ஸும் கைகொடுக்க இந்தியா இந்த ஒரு நாள் த்டரில் 2- 1 என்று முன்னிலை பெற்றுள்ளது.

கார்த்திக் நேற்று ஷாட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக அபாரமான புல் ஷாட்களையும் ஆஃப் திசையில் சில சிறந்த கட் ஷாட்களையும் விளையாடி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய கிறிச் கெய்ல் இந்திய அணித் தலைவர் தோனி விளையாடிய ஆட்டத்தை பாராட்டிப் பேசியதோடு, விக்கெட்டுகளுக்கு இடையே அபாரமாக ஓடி தோனி தங்கள் அணி ஃபீல்டர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார் என்று கூறினார்.

ஆட்ட நாயகன் தோனி கூறுகையில், டக் வொர்த் லூயிஸ் கணக்கீட்டு முறையால் எங்களால் இரண்டாவது பவர் பிளேயை பயன்படுத்த முடியாமல் போனது. நல்ல துவக்கம் தேவைப்பட்டது. கம்பீர் நின்று ஆடினார். நன்றாக ஓடினார். ஸ்பின்னர்களை கவருக்கு மேலும் மிட் விக்கெட்டிற்கு மேலும் தூக்கி அடிப்பதில் சிறந்து விளங்கினர். கடைசி ஓவர் வீசப்படும் முனையில் எப்போதும் ஆன் திசையில் ஒரு சிக்சருக்கு வாய்ப்பிருக்கிறது என்று எங்களுக்குக் தெரிந்திருந்தது. ஏனெனில் காற்று பலமாக வீசியதால் பந்து மாட்டினால் சிக்சர் என்று அறிந்திருந்தோம், அந்த கணிப்பு சரியானதாக அமைந்தது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்