டீவிலியர்ஸ் அரைசதம் தென் ஆப்பிரிக்கா 105/2

வியாழன், 24 பிப்ரவரி 2011 (20:21 IST)
டெல்லியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 223 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா மெதுவே முன்னேறிவருகிறது. சற்று முன் வரை 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்க்கு 105 ரன்கள் எடுத்துள்ளது.

காலிஸ், ஆம்லா அடுத்தடுத்து ஆட்டமிழந்த பிறகு டீவிலியர்ஸ் வேகம் காட்ட மேற்கிந்திய அணியின் பந்து வீச்சில் சட்டென ஒன்றுமேயில்லாமல் போய் விட்டது.

கேப்டன் ஸ்மித் 58 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இவருக்கு ஒரு எளிதான ரன் அவுட் வாய்ப்பை பந்து வீச்சாளர் சுலைமான் பென் கோட்டை விட்டார்.

மறு முனையில் கிறிஸ் கெய்ல் பந்தை லாங் ஆன் திசையில் பெரிய சிக்சருக்குத் தூக்கி டீவிலியர்ஸ் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 55 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து விளையாடுகிறார்.

இவருக்கும் ஒரு கேட்ச் முயற்சி செய்யப்படாமலேயே கோட்டை விடப்பட்டது.

பென் ஒரு விக்கெட்டையும் ரோச் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்