டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வென்ற தென் ஆப்பிரிக்கா! தொடரைக் கைப்பற்றியது

புதன், 18 ஜனவரி 2012 (12:42 IST)
FILE
தென் ஆப்பிரிக்காவில் உள்ள ப்ளூம்ஃபான்டைனில் நடைபெற்ற நேற்றைய 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா 4 ரன்களில் இலங்கையை வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை தென் ஆப்பிரிக்கா 3- 0 என்று கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த இலங்கை தரங்கா (58), குலசேகரா(40) ஆகியோரின் பங்களிப்ப்ன் மூலம் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய தென் அப்பிரிக்கா 34 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடை பட்டது. அதன் பிறகு ஆட்டம் தொடங்க முடியவில்லை என்பதால் தென் ஆப்பிரிக்கா டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெர்றது.

தென் ஆப்பிரிக்க அணியில் டூ ப்ளெசிஸ் அதிகபட்சமாக 77 ரன்களை விளாசினார். ஏ.பி. டிவிலியர்ஸ் 39 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

34 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 179 ரன்கள் என்று இருந்தபோது இரு அணிகளும் இதே ஓவரில் ஒரே நிலையில்தான் இருந்தன ஆனால் டக்வொர்த் லூயிஸ் கணக்கீட்டின் படி தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

தன்னை பின்னால் களமிறக்கிக் கொண்டு டூபிளெசிஸை முன்னால் களமிறக்கியதன் மூலம் டிவிலியர்ஸ் தான் ஒரு வித்தியாசமான கேப்டன் என்பதை நிரூபித்தார்.

ஆட்டம் முடிந்த அந்த ஓவரில் இலங்கை 8 ரன்களை விட்டுக் கொடுத்ததால் வெற்றி பறிபோனது.

முன்னதாக லஷித் மலிங்கா இரண்டு விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்த தென் ஆப்பிரிக்கா தடுமாறியது. அப்போது டூபிளெசிஸ் களமிறக்கப்பட்டார். மறு முனையில் டுமினி அபாரமாக ஒன்று இரண்டு மற்றும் ஓரிரு பவுண்டரிகளுடன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள டுபிளெசிஸ் தன்னை நிறுவிக்கொண்டார்.

61 ரன்களை இருவரும் சேர்த்தபோது டுமினி ரன் அவுட் ஆனார். ஆனால் ஒரு கோணத்தில் டுமினி கிரீஸை தொட்டுவிட்டதாகவே தெரிந்தது. டுபிளெசிஸ்சும் சிறிது நேரத்தில் ரன் அவுட் ஆனார். ஆனால் கடைசியில் கேப்டன் டிவிலியர்ஸ் 39 ரன்களை எடுக்க ஆட்டம் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக அமைந்தது.

முன்னதாக இலங்கை அணியில் தில்ஷான் மெதுவாக விளையாட தரங்கா சற்றே ஆக்ரோஷம் காட்டி 58 ரன்களை விரைவு கதியில் எடுத்தார். மகேலா ஜெயவர்தனே, சங்கக்காரா இருவரும் அபாரமாக விளையாடி வந்த நிலையில் டுபிளெசிஸ் மற்றும் இங்ரம் ஆகியோரின் அபாரமான ஃபீல்டிங்கிற்கு இருவரும் ரன் அவுட் ஆயினர்.

மழை குறுக்கிட்ட போது ஆட்டம் இருதரப்பிற்குமே சாதகமாக இருந்தது. இலங்கைக்கு சற்றே கூடுதல் வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் இலங்கை மழைக்காக திட்டமிடவில்லை இதனால் தொடரை இழக்க நேரிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்