சென்னையில் அகாடமி-ஹெய்டன் திட்டம்

வெள்ளி, 24 ஜூலை 2009 (15:13 IST)
சென்னையில் இளையோர் அகாடமி ஒன்றைத் துவங்க ஆஸ்ட்ரேலிய முன்னாள் துவக்க வீரரும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான மேத்யூ ஹெய்டன் திட்டமிட்டுள்ளார். இதற்காக ராகுல் திராவிட், ஸ்டீஃபென் பிளெமிங் ஆகியோரது உதவியை அவர் நாடியுள்ளார்.

"10 ஆண்டுகளுக்கு முன்னால் பந்துகள் திரும்பும் சேபாக் ஆட்டக்களத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஆஸ்ட்ரேலியாவிற்காக ஒரு நாள் இங்கு சதம் ஒன்றை எடுப்பேன் என்று எனக்கு நானே கூறிகொண்டேன், அது நிறைவேறியது. இந்த நகரத்திலிருந்து நான் நிறைய பெற்றுள்ளேன், அதற்கு பதிலீடாக ஏதாவது செய்ய தற்போது முடிவு செய்துள்ளேன்" என்று மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த அகாடமியில் கிரிக்கெட் மட்டுமே பிரதானமாக இருக்காது, கல்வியும் ஒரு முக்கிய அங்கமாக திகழும் என்று கூறிய ஹெய்டன், இந்த அகாடமியில் பயிற்சி பெறும் இளைஞர்கள் கிரிக்கெட்டையே தங்கள் வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை, கல்விதான் எப்போதும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

தென் ஆப்பிரிக்காவில் ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாடும் போது ராகுல் திராவிடிடம் தனது இந்தத் திட்டத்தைப் பற்றி கூறி ஒத்துழைப்பு கேட்டபோது இதற்கு திராவிடும் மனப்பூர்வ சம்மதம் தெரிவித்ததாக ஹெய்டன் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டீவ் -வாஹ் பற்றி குறிப்பிட்ட மேத்யூ ஹெய்டன், "உதயன் அமைப்பிற்காக ஸ்டீவ் வாஹ் செய்து வரும் பணிகளால் நான் நிறைய தாக்கம் பெற்றேன், அதே போல் சென்னையில் ஒன்றை செய்ய இப்போது நான் திட்டமிட்டுள்ளேன் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்