சச்சின் டெண்டுல்கரின் புதிய வெள்ளி நாணயங்கள் வெளியீடு

சனி, 15 மார்ச் 2014 (18:53 IST)
சமீபத்தில் ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் முகம் பொறிக்கப்பட்ட புதிய வெள்ளி நாணயங்களை டைமண்ட் இந்தியா மற்றும் வேல்யூமார்ட் கோல்டு நிறுவனம் இணைந்து மும்பையில் நேற்று வெளியிட்டது.
FILE

இந்த நாணயத்தில் சச்சின் மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருப்பதை நினைவூட்டும் வகையில் 200 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் 1989 லிருந்து 2013 வரையிலான தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பெற்றுள்ள 15,921 ரன்களை நினைவுபடுத்தும் வகையில் 200 கிராம் எடை கொண்ட 15,921 வெள்ளி நாணயங்கள் வெளியிடப்பட்டன.

தனது நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சச்சின் பேசியதாவது:-

நான் சிறுவனாக இருந்தபோது நாணயங்கள் மற்றும் தபால் தலைகளை சேகரித்திருக்கிறேன். ஆனால் அந்த காலகட்டத்தில் நான் அதைவிட சிறந்த காரியங்களை செய்யவேண்டியிருந்தது. அந்த நேரத்தில்தான் என்னுடைய ஆர்வம் லேசாக மாறியது. நாணயங்களை சேகரிப்பதைவிட ரன்களை சேர்ப்பதே எனக்கு சிறந்த வாய்ப்பாக இருந்தது. அதுவே என் வாழ்க்கைக்கான அர்த்தத்தையும், திசையையும் காட்டியது என்று சச்சின் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்