கேட்சைக் கோட்டை விட்ட லஷ்மண்! வறுபடும் இந்திய அணி!

செவ்வாய், 24 ஜனவரி 2012 (14:03 IST)
FILE
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று 36டிகிரி வெயிலில் பாண்டிங்கும், கிளார்க்கும் இந்திய பந்து வீச்சை வறுத்து எடுத்தனர். இருவருமே சதம் எடுத்து நாட் அவுட்டாகச் செல்ல ஆஸ்ட்ரேலியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 335 ரன்கள் எடுத்துள்ளது.

இரண்டாவது புதிய பந்தை எடுத்தபோது இஷாந்த் ஷர்மா பந்தில் கிளார்க் எட்ஜ் செய்ய பந்து ஸ்லிப் திசையில் லஷ்மணுக்கு வலது கைக்கு வெளியே சற்றே வைடாகவே சென்றது ஆனால் அவர் அதனைக் கோட்டைவிட்டார். ஆட்டத்தில் எந்த வித தீவிரமும் காணாம்ல் போன பிறகு இது போன்ற கேட்சை ஒருவர் எப்படி பிடிக்க முடியும்.

இந்திய அணியின் கேப்டந்தான் மாறினாரே தவிர அணுகுமுறையில் மாற்றமில்லை. விக்கெட்டுகள் தானே விழும் என்ற நம்பிக்கையில் தன் பங்கிற்கு வெறும் பந்து வீச்சு மாற்றத்தை மட்டுமே சேவாக் செய்து வந்தார். இரண்டாவது புதிய பந்தை எடுத்தபோது 3வது ஸ்லிப் இல்லாமல் பந்து வீசும் உத்தியை நாம் என்னவென்று கூறுவது?

பாண்டிங்கும், கிளார்க்கும் இணைந்து இதுவரை 251 ரன்கள் எடுத்துள்ளனர். முதல் இரண்டு மணிநேர ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து ஆஸ்ட்ரேலியா 84 ரன்களை எடுத்தது.

அடுத்த இரண்டு அமர்வுகளிலும் இந்தியா சரியான அணுகுமுறையுடன் பந்து வீசவில்லை. ஃபீல்டிங் அமைப்பும் எளிதான ரன்களுக்கு வழி வகுத்தது. உமேஷ் யாதவிற்கு இன்று மறக்கப்படவேண்டிய தினமாயிற்று 12 ஓவர்களில் அவர் 87 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

37 டிகிரி வெயிலில் முதலில் சக்தி இழந்த இந்திய வீரர்கள் கடைசியில் நம்பிக்கையையும் இழந்தனர். சிட்னியில் பாண்டிங், கிளார்க் ஜோடி 288 ரன்களைச் சேர்த்தது இந்த போட்டியில் இந்த விக்கெட்டை உடைக்கப்போவது யார் என்பது தெரியவில்லை.

ஃபீல்டிங் அமைப்பு மீண்டும் ஒரு பெரிய தலைவலியாக பந்து வீச்சாளர்களுக்கு அமைந்தது, கிளார்க் 36 ரன்களில் இருந்தபோது, இஷாந்தின் வைடு பந்தை துரத்தி எட்ஜ் செய்தார் ஆனால் முதல் ஸ்லிப் நிறுத்தப்படவில்லை. மாறாக 2வது ஸ்லிப் நிறுத்தப்பட்டிருந்தது. எந்தப் பள்ளிக்கூடத்தில் சேவாக் இந்த ஃபீல்டிங் முறையை கற்றாரோ தெரியவில்லை. வாய்ப்பு பறிபோனது.

இதன் பிறகு ஸ்லிப் இருந்தால்தானே கேட்ச் வருகிறது என்று நினைத்தாரோ என்னவோ ஸ்லிப்களையே எடுத்து விட்டார், விக்கெட்டுகள் எப்படி வரும்? ஒன்றிரண்டு அரிதான எட்ஜ்களும் ஆளில்லாமல் வெத்தாகச் சென்றது.

FILE
தீவிர அணுகுமுறை இல்லாத ஒரு கேப்டன்சி, மீண்டும் ஆஸ்ட்ரேலியா டிக்ளேர் செய்வதை எதிர்ப்பர்த்துக் காத்திருக்கும் பரிதாப நிலை இந்தியாவுக்கு.

மீண்டும் இஷாந்திற்கு அதிர்ஷ்டம் இல்லை. அபாரமாகவே வீசினார். பாண்டிங்கை பாடாய்ப் படுத்தினார். ஆனால் மீண்டும் ஆக்ரோஷமான கேப்டனாக இருந்திருந்தால் ஃபீல்டிங்கை நெருக்கி பாண்டிங்கை காலி செய்திருப்பார், ஆனால் ஆக்ரோஷ பேட்ஸ்மென் சேவாக் கேப்டன்சியில் அடுப்படி பூனையாக இருந்தார்.

பாண்டிங் 41வது டெஸ்ட் சதத்தை எடுத்ததோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்களைக் கடந்தார்.

கிளார்க் ஆக்ரோஷமாக ஆடினார் இவருவரில் கிளார்க்தான் சேவாகின் கள வியூகத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.

பாண்டிங் துவக்கத்தில் பஞ்ச், டிரைவ், கட், புல் என்று தனது பழைய டச்சைக்காண்பித்தார்.

முன்னதாக வார்னருக்கு ஜாகீர் கான் தான் யார் என்பதைக் காண்பித்தார் பந்தை உள்ளே கொண்டு வந்து 8 ரன்களில் அவரை எல்.பி. செய்தார். நல்லவேளை. அவரை நிற்க விட்டிருந்தால் மீண்டும் துவம்சம்தான்!

ஷான் மார்ஷ் இடம் கேள்விக்குறியாகிவிட்டது. அஷ்வினின் பந்தில் பவுல்டு ஆனார். கோவனும் பாண்டிங்கும் இணைந்து 53 ரன்களைச் சேர்த்தனர். கோவன் 30 ரன்கள் எடுத்து கவர் திசையில் லஷ்மணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த கேட்சை லஷ்மண் சிறப்பாக எடுத்தார். ஆனால் கடைசியில் கோட்டை விட்டார்.

மீண்டும் கிளார்க் கடைசியில் இஷாந்தை எட்ஜ் செய்தபோது 3வது ஸ்லிப் நிறுத்தியிருந்தால் அது எளிதான கேட்சாக அமைந்திருக்கும். தோனிக்கும் சேவாகிற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை.

நாளை புதிய பந்தில் மேலும் ஆக்ரோஷமாக வீசி பெர்த்தில் 155 ரன்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது போல் வீழ்த்தினால் இந்தியா மீளலாம் இல்லையெனில் ஆஸ்ட்ரேலியா 600 ரன்களுக்கும் மேல் குவித்து இந்தியாவை வீழ்த்த முயலும்.

வெப்துனியாவைப் படிக்கவும்