ஒரு நாள் தொடரில் ஆஸ்ட்ரேலியா வெற்றி

சனி, 2 மே 2009 (12:49 IST)
அபுதாபியில் நடைபெர்ற பாகிஸ்தான்-ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையேயான 4-வது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 198 ரன்கள் இலக்கை ஆஸ்ட்ரேலியா 44.2 ஓவர்களில் எடுத்து வெற்றி பெற்று தொடரை 3- 1 என்று கைப்பற்றியது. கேப்டன் மைக்கேல் கிளார்க் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெற்றி இலக்கை துரத்த ஆஸ்ட்ரேலிய துவக்க வீரர்கள் ஹேடினும், ஷேன் வாட்சனும் களமிறங்கினர். இதில் ஷோயப் அக்தர் வீசிய தீப்பொறி பறக்கும் வேகப்பந்து வீச்சிற்கு பிராட் ஹேடினும், மார்கஸ் நார்த்தும் ஆட்டமிழந்தனர்.

ஆனால் அதன் பிறகு வாட்சனும் கிளார்க்கும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 197 ரன்களை சேர்த்து வெற்றி பெற வைத்தனர். வாட்சன் 85 ரனகள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். 122 பந்துகளை சந்தித்த கிளார்க் அதில் 14 பவுண்டரிகளை அடித்தார்.

ஆட்ட நாயகனாக கிளார்க் தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக டாஸ் வென்று பாகிஸ்தான் முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. ஆனால் ஆஸ்ட்ரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் டக் போலிங்கர் சல்மான் பட், மாலிக், அஃப்ரீடி என்று நடுக்கள வீரர்களை வீழ்த்தினார். அஹ்மட் ஷேஜாத் மட்டுமே 43 ரன்களை எடுத்தார்.

மிஸ்பா 34 ரன்களையும், மாலிக் 27 ரன்களையும் அஃப்ரீடி 40 ரன்களையும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி 197 ரன்களில் ஆட்டமிழந்தது.

டக் போலிங்கர் 35 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரேக்கன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்